Naanchil Natarajan நன்றி
வேணாட்டு அரசர்களின் சாதனைகளை விளக்கும் கல்வெட்டுகள் பல தமிழகத்தில் உள்ளன. கி.பி.1122ஆம் ஆண்டு திருவாலஞ்சுழி கோயிலில் பதியப்பட்ட கல்வெட்டு அரசர் இராமர் திருவடி முதலாம் குலோத்துங்கனை தஞ்சாவூர் வரை விரட்டிச் சென்றதைக் குறிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கன், பாண்டிய மன்னர் சடயன் வீரபாண்டியனிடமிருந்து பறித்துச் சென்ற செஙகோலையும் கிரீடத்தையும் வேணாட்டு அரசர் முதலாம் வீர உதயமார்த்தாண்டன் தஞ்சாவூருக்கு படையெடுத்துச் சென்று மீட்டுக் கொடுத்தார்.
கி.பி. 1310இல் பாண்டிய நாட்டின்மீது கொள்ளையடிக்க வந்த டில்லி சுல்தானின் படைத்தளபதி மாலிக்காபூரை வேணாட்டு அரசர் குலசேகரப்பெருமாள் திருவடி தமிழ்நாட்டைவிட்டே துரத்தினார். அதனால் அவருக்கு “மும்மண்டலாதிபதி” என பட்டம் சூட்டப்பட்டதாக 1311ஆம் ஆண்டின் காஞ்சிபுரம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மாலிக்கபூரால் சிதைக்கப்பட்ட சிறிரெங்கம் ரெங்கநாதர் கோயிலை அவர் சீரமைத்துக் கொடுத்ததாக சிறிரெங்கம் கல்வெட்டு கூறுகிறது.
1530இல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த செல்லப்பாநாயக்கர் எனும் சங்கரநாராயணனை வேணாட்டு அரசரான மூன்றாம் வீர உதயமார்த்தாண்டன் சிறைபிடித்தார். தொடர்ந்து வந்த அச்சுதநாயக்கனின் படையையும் தாமிரபரணிப் போரில் (1532) வெற்றி கொண்டார். இதனால் அவரை “செயதுங்கநாட்டு சங்கர நாராயணனை வென்று மண்கொண்டவர்” என 1533 ஆம் ஆண்டின் கன்னியாகுமரி கல்வெட்டு கூறுகிறது. வேணாட்டு அரசர் புதுவை அரசருக்கு அனுப்பிய கவிதைக் கடிதம் தஞ்சாவூர்ப்பகுதி மூவாலூர் கோயில் கல்வெட்டில் பதியப்பட்டிருப்பதால் அவர் தஞ்சாவூர்ப் பகுதியையும் ஆட்சி செய்தமை தெரிகிறது.
இப்படி பல வரலாற்று நிகழ்வுகளும் கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளபோதும் தமிழக வரலாற்று நூல்களில் வேணாடு பற்றி சொல்லப்படவில்லை.
Comments
Post a Comment