கொற்கை தமிழனின் அடையாளம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முக்காணியிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.ஏரல் வழியாகவும் பழைய காயல் வழியாகவும் வருவதற்கு அரசு பஸ்களும், மினி பஸ்கள் உண்டு.ஆட்டோ மூலமும் வரலாம்.... தற்போதைய கொற்கை.பசுமையான வயல்வெளி.வாழத் தோட்டங்கள் காணுமிடங்களிலெல்லாம் சிப்பிகளும் சங்குகளும் குவியல் குவியலாக. முத்தால் உலகத்தை தன்னிடம் ஈர்த்து வைத்திருந்த கொற்கையா இது.....வாளும் வேலும் வீசி விளையாடிய வீதிகளா இவை....
சங்ககாலம் தமிழனின் பொற்காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரை , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய சிறிய படகுத் துறைகளாக காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் ஏரல்,உமரிக்காடு ,வாழவல்லான், முக்காணி,த்தூர் , ஆறுமுகநேரி , பழையகாயல் , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்கள் . கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் இருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . பொதிகை மலையில் தாமிரபரணி ஆறு இக்குடாக் கடலினுள் ஓடி வந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச் சிப்பிகள் உருவானது . வலம்புரிச் சங்குகளும் ஏராளமாக விளைந்தன .மன்னர்கள் அணிந்த முத்து ஏகவடம். ரோமபுரி ராணி முதல் உலகெங்கும் வாழ்ந்த அரசகுலப் பெண்கள் கொற்கை முத்தை அணிகலனாக அணிந்து அழகு பார்த்ததில் வியப்பேதும் இல்லை. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்படுவது அங்கு நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது . 5000 ஆண்டுகளுக்கு முன்பே கொற்கை முத்து வியாபாரத்தை குடநாட்டு வியாபாரிகள் செய்துள்ளனர்.
அகநானூற்றுப் பாடல்,‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து’ என்றும்,சிலப்பதிகாரம் ‘நற்றிறம் படரா கொற்கை வேந்தே’ என்றும் சிறப்பிக்கின்றது.வரலாற்று அறிஞர்கள் கி.மு.2500 இல் உக்கிரப் பெருவழுதியால் நிறுவப்பட்டு, அகத்தியராலும் பிற தமிழ் புலவர்களாலும் தமிழ் ஆய்வு செய்யப்பட்ட இடைச்சங்கம் இருந்து தமிழ் வளர்த்தது கொற்கையில்தான்” என்பர்.
இளவரசன் வீற்றிருந்து அரசியல் பயிற்சி பெற்ற துறைமுகத் துணைத் தலைநகரமாக விளங்கிய நகரம்தான் நமது கொற்கை. அந்நாளில் மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சிசெய்து வந்தான், கோவலன் கண்ணகி வரலாற்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மதுரை பொற் கொல்லரின் தவறான குற்றச்சாட்டால் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுகிறான். தவறான தீர்ப்பு வழங்கியதை உணர்ந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரை விடுகிறான்.பாண்டிமாதேவியும் உயிரைபோக்கினாள். கண்ணகியும் மதுரையை எரித்துச் சாம்பலாக்குகின்றாள். சிலப்பதிகாரம் உருவாயிற்று.இச் சம்பவத்தால் கொற்கையில் அரசாண்டு கொண்டிருந்த இளவரசன் வெற்றிவேற் செழியன் பொற்கொல்லர் இனத்தின் மீது கோபங் கொண்டு கொற்கையில் வாழ்ந்து வந்த பொற்கொல்லர்கள் ஆயிரம் பேரைக் கொன்றான்.ஆயிரம் பொற்கொல்லர்கள் வசித்து வந்த சிறப்பும், நாணயங்கள் தயாரித்த அக்கசாலையும் இருந்த செழுமையான நகரம் கொற்கை.
இப்பொழுது ஆள் நடமாட்டமில்லாத அமைதி நிலவும் காணப்படும் கொற்கையைப் பார்க்கும் போது இதுதானா அது.என்ற சந்தேகம் வரும்.மாடமாளிகையும்,கூடல் கோபுரங்களும் எங்கே போனது. மெல்லிய தென்றலுடன் எந்நேரமும் ஒலித்துக்கொண்டிருந்த குதிரைகளின் குளம்படிச் சப்தமும்,கனைப்புகளும் காணாமல் போனது வியப்பு.காலவெள்ளத்தால் சுவடு தெரியாமல் அழிந்து விட்டது.
மிகவும் பழமையான காலங்களான பழங்கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம்,உலோகக் காலம் ஆகியனவாகும்.இந்த காலங்களில் இங்கு தமிழன் பண்பட்ட நாகரீகத்தோடு வாழ்ந்திருக்கின்றான். கல்லால் ஆன கரடுமுரடான ஆயுதங்களைப் வேட்டையாட பயன்படுத்திய காலம் பழங்கற்காலம்.கூர்மையான கற்களில் ஈட்டி,அம்பு முனைகள், இருபுறமும் வெட்டுப் பகுதிகளைக் கொண்டவைகள்,வட்டுகள், பயன்படுத்தியது இடைக் கற்காலம். உளி,கோடாரி,கல்திரிகை,பானைகள் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படும் பொருட்களைப் பயன்படுத்திய காலம் புதியகற்காலம். உலோகக் காலத்தைச்சேர்ந்த ஆயுதங்கள் ,பயன்படு பொருட்கள் ஏராளமாகக் கிடைத்தன.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கொற்கையின் பல்வேறு இடங்களிலும் ஏராளமாகக் கிடைத்துள்ளன.இது தாழிக்காடு ஆக இருந்துள்ளது.பல அடுக்குகள் தாழிகள் இவ்வாறு இருக்கின்றன. கார்பன் டேட்டிங் அறிவியல் ஆய்வு மூலம், இங்குள்ள முதுமக்கள் தாழிகளில் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து இருந்துள்ளது என்பதை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர் .கொற்கையில் அயல்நாட்டுப் பானை ஓடுகள்,பீங்கான்கள் குவியல்,குவியலாகக் கிடைத்து வருவது தொமைக்குச் சான்றாகும். சங்ககாலத்தைச் சேர்ந்த தமிழன் பயன்படுத்திய பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் காணப்படும் பழமையான தமிழ் வரிவடிவமான தமிழ் பிராமி எழுத்துக்களில் உள்ளது.அதன் காலம் கி.மு. 785 முதல் 95 ஆண்டுகள் கூடவோ குறைவாகவோ இருக்கலாம் என்று கார்பன் டேட்டிங் ஆராய்ச்சி மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
கொற்கைப் பகுதியில் காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், உள்ளிட்ட கிராமங்கள், துறைமுகமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், அயல்நாடுகளுக்கு முத்து, சிப்பி, பவளம்,உப்பு, அரிசி,மிளகு,ஏலம்,கிராம்பு உள்ளிட்ட பொருட்களும், மற்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.தூங்கா துறைமுக நகரமாக கொற்கைத் திகழ்ந்தது. கொற்கை முத்துகள் கிரேக்கத்திலும் யவனத்திலும் அரச குடும்பத்தினரால் பெரிதும் விரும்பி அணியப்பட்டன.உலகப் பேரழகி கிளியோபாட்ராவால் விரும்பி அணிந்தாள் கொற்கை முத்துவை. அராபிய நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் பீங்கான்கள்,காசுகள் அயல்நாட்டு தொடர்பை கூறுகிறது. சோனகர் , யவனர் , எகிப்தியர் , அராபியர் மற்றும் பல நாட்டு வணிகர்களும் அரசியல் தூதர்களும் வலம் வந்த சிறிய கப்பல்களின் ஒலியும் கொற்கைக்குடாவின் அலைகளற்ற கடலும் , தமிரபரணி பொருநை ஆறு மெல்ல நடந்து வந்து கலந்து நின்ற பொலிவும் , கதவுகளற்ற முத்து வியாபாரக் கடைகளின் ஒலிகளும் இன்றும் மலரும் நினைவுகளாக வந்து செல்கின்றன . அயல் நாடுகளுடன் வணிகத்தொடர்பும் அரசியல் தொடர்பும் கொற்கைத்துறைமுகத்திற்கு இருந்தது.சேர,சோழ,பாண்டியர்களின் மீன்கொடி,விற் கொடி,புலிக்கொடி வேறுபட்ட பல காலங்களில் பட்டொளி வீசிப்பறந்துள்ளன. சீன,அராபிய தேசத்தின் காசுகள்,பீங்கான், கோப்பைகள், மதுபாட்டில்கள் தற்போதும் பூமிக்கடியிலிருந்து வெளிப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ள்ஸ், பிளினி போன்ற அயல்நாட்டு அறிஞர்களின் பயணக் குறிப்பிலும், சங்ககால இலக்கியங்களிலும்,கோயில் கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும்,பழங்கால நாணயங்கள் மூலமும் கொற்கையின் சிறப்பை அறிகின்றோம் . ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள் என்று தமது குறிப்பில் அறிஞர் ஸ்டிராபோ பதிவு செய்துள்ளார்.மதுரை மற்றும் கொற்கை பாண்டிய மன்னர்கள் வலிமையான குதிரைப்படையைக் கொண்டிருந்தனர். கொற்கைத் துறைமுகத்தில் பாய் மரக் கப்பல்களின் மூலம் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்கிறார் வரலாற்று அறிஞர் வாசப்.
மார்கோபோலோ மற்றும் கிரேக்கர்களின் பயணக் குறிப்புகளிலிருந்து கொற்கையை அகழ்வாராய்ச்சி செய்தார் கால்டுவெல் ,கொற்கையின் தற்போதைய நிலமட்டத்திலிருந்து எட்டு அடிக்கு கீழே பழங்கால கொற்கைத் துறைமுகம் இருந்ததாகவும் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தினால் புதையுண்டு போயிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.கொற்கையில் எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்டினாலும் கடற்சிப்பிகள், சங்குகள் அள்ள,அள்ளக் குறையாமல் பொக்கிசமாய் கிடைக்கின்றன, சங்க காலத்தில் பெண்கள் சங்கினால் ஆன வளையல்கள், மோதிரங்களை அணிந்தனர் என்பதற்கு சான்றாக அறுக்கப்பட்ட சங்கின் துண்டுகளும் சிதறல்களும் குவியல், குவியலாகக் கிடைப்பது வியப்பு. பாண்டிய மன்னர்காலத்தின் தலைசிறந்த துறைமுகப் பட்டினமாக கொற்கை விளங்கியது.கொற்கையில் நாணயங்கள் தயாரிக்கும் தொழில்கூடம் இருந்த இடம் அக்கசாலை என்றும் அங்குள்ள கோயில் அக்கசாலை விநாயகர் கோயில் என்று , இன்றும் மக்களால் அழைக்கப்படுவது தொன்மை மாறாத பேச்சு வழக்குக்குச் சான்றாகும்.
அக்கசாலை ஈஸ்வரமுடையார் என்று கோயிலின் கல்வெட்டுக்கள் சிவன் கோயிலாக இதனைக் கூறினாலும் இக்கோயிலில் விநாயகர் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார். கோயில் கட்டட அமைப்பில் அதிட்டானம் முதல் கருவறை மீது அமைக்கப்பட்டுள்ள விமானம் வரையிலும் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம் ஒரே கல்லால் நாகர வடிவில் அமைந்துள்ளது, கோயில் கட்டட்டக் கலையின் சிறப்பாகும். சுவற்றில் காணப்படும் நான்கு கல்வெட்டுக்களில் பழமையானது முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும்.இது இவ்வூரை கொற்கை என்னும் மதுராந்தக நல்லூர் என்று கூறுகின்றது.இக்கோயிலைக் கட்டியவன் சோழன் . தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்களான ஸ்ரீவல்லபன், வீரபாண்டியன் கல்வெட்டுக்களும் உள்ளன.அவைகள் கொற்கையை, குடநாட்டுக் கொற்கை , கொற்கையான மதுரோதைய நல்லூர் என்றும் கூறுகிறது.
கொற்கையின் பசுமைக்கு எழில் சேர்க்க குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தினுள் பழமையான அம்மன் கோயில் இருக்கின்றது. கருங்கல்லால் ஆன இக்கோயிலின் மூலவர் அருள்மிகு வெற்றிவேல்நங்கை அம்மன் . இக்கோயில் கண்ணகிக்காக வெற்றிவேல் செழியனால் எழுப்பட்டது என்ற கருத்து மக்களிடையே நிலவுவதால் கண்ணகி கோயில் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் கோயிலினுள் இருக்கும் சிலை துர்க்கையின் வடிவத்தில் உள்ளது.இக்கோயின் முன்புதான் வெற்றிவேல் செழியன் கொற்கையில் வசித்து வந்த ஆயிரம் பொற்கொல்லர்களை கழுவேற்றிக்கொன்றான் என்று மக்கள் நம்புகின்றனர்.
கொற்கையில் அரசகுலத்தினர் நீராடிய இடம் என்று இன்றும் கருதப்படும் கன்னிமார் குட்டம் என்ற சிறிய குளம் இருக்கிறது.
கொற்கையில் புதையல்கள் இருப்பதாகவும்,அதனை பூதங்கள் காவல் காத்துக் கொண்டிருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். காத்துக்கொண்டிருப்பதாக மக்களால் இன்றும் நம்பப்படுகின்றது.வயல்வெளி,வாழைத்தோட்டம்,குளம் என்று ஒவ்வொரு சதுர அடியும் ,பகுதி பகுதிகளாக ஆழமாகத் தோண்டி புதையலைத் தேடி தேடி தேடுவது தொடர்கதை ஆகி விட்டது.இப்புதையல் தேடுதலில் முதுமக்கள் தாழிகளும்,பழங்கால செப்புக் காசுகளும் கிடைக்கின்றன. அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்கக் காசுகளும் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இலக்கிய ஆய்வாளர்களுக்கும், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் கொற்கை கருத்துக் கருவூலம்.பழங்கால ஓடுகளின் குறியீடுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு எழுத்தாகக் காட்டும் அற்புதம் கொற்கையில்.
சங்ககாலத்தில் உலகமெங்கும் பெருமை பெற்ற கொற்கையில் பழம் பெருமைக்குச் சான்றாக ஊரின் நுழைவில் வன்னிமரம் உள்ளது.தரையில் சாய்ந்த நிலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் சீற்றங்களையும், மனிதனின் ஆசைகளையும், பேராசைகளையும் அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் பார்த்தும் பாராதது போல முதுமையில் கூன் விழுந்தது போல காட்சிதருகிறது. வன்னிமரம் மக்களால் தெய்வமாக வழிபடப்படுகின்றது. இவ்வன்னி மரத்தடியில் பழமையான ஒரு சமண தீர்த்தங்கரர் சிற்பம் பூமியில் புதையுண்டு இருந்தது தற்போது அது காணவில்லை.
கொற்கையைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட பிற்காலப்பாண்டியன் ஒருவனின் வளர்ப்பு மகன் இளவரசன் கிழக்கித்திமுத்து என்பவர் பற்றிய கதை உள்ளது. கதைப்பாடலின்படி தன்னைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்ற நினைத்த அமைச்சர்களின் பேராசையை முறியடிக்க, மன்னன் தன்னுடைய அரண்மனைக் கருவூலங்களை பெட்டகம் ஒன்றில் வைத்தும், பொன்னையெல்லாம் உருக்கி ஒன்றாகச் சேர்த்து வன்னி மரத்தடியில் இருந்த தைலக் கிணற்றினுள் போட்டு மூடி அதற்கு காவலாக கிழக்கித்திமுத்துவையும்,பூதங்களையும் வைத்துள்ளான்.இந்த கொற்கை இளவரசன் கிழக்கித்திமுத்து சாமிக்கு கொற்கையைச் சுற்றி பத்து மைல் தூரத்திற்குள் ஏராளமான கோயில்கள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் அவருக்கு நிகழ்த்துக்கலையான வில்லுப்பாடல்,கணியான் பாடல் பாடியும் ஆடு,கோழி ஊட்டுபலி கொடுத்தும் கொடைவிழாவை மக்கள் நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.
இத்தகையச் சிறப்புமிக்க கொற்கையின் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் சுனாமி இயற்கைத் தாண்டவமாடியது. கடலலைகள் மணலை அள்ளிக் குவித்தன . தாமிரபரணியும் மண் அள்ளிச்சேர்த்தது. இத்தகைய சீற்றத்தால் ஜந்து மைல் தூரம் உள்வாங்கியிருந்த கொற்கைக்குடா மண்மேடிட்டுப் போனது . என்னே.. பரிதாபம் இயற்கைத் துறைமுகம் என்ற கட்டமைப்பை இயற்கைப் பறித்தெடுத்தது .
தென்தமிழகத்திற்கு வருகைதந்த இத்தாலி மார்க்கோபோலோ பழையகாயல் துறைமுகத்தில் கப்பலேறியதைத் தன்னுடைய பயணக் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார் . அதன்படி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை கொற்கைத்துறைமுகம் இருந்துள்ளது என்பதை யூகிக்கலாம்.
கொற்கையின் துறைமுகம் மண்மேடான பின்புதான் பழையகாயல் துறைமுகமானது . பின்னர் வந்த கடல்கோளினால் பழையகாயல் துறைமுகமும் தூர்ந்து போனது . தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகத்தின் அடையாளமான இரண்டாவது துறைமுகமும் சுவடு தெரியாமல் போனது . கி.பி.1580 இல் போர்ச்சுக்கீசியர்களால் தூத்துக்குடி துறைமுகம் உருவானது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகம் போற்றும் துறைமுகம் என்ற பெருமை தூத்துக்குடி மாவட்டம் (குடநாடு) தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. .
கொற்கையில் அகழ்வாய்வு செய்து அங்கு கிடைத்த தாழிகள்,கற்காலப் பொருட்கள்,இரும்பு ஆயுதங்கள்,சுடுமண் பாவைகள் கல்வெட்டுகள்,பட்டயங்கள் போன்ற அரிய பொருட்களை வகை,வகையாய் கொற்கையில் தமிழகஅரசு அகழ்வைப்பக அருங்காட்சியகம் ஒன்றை அமைத்திருந்தது .எவரும் பார்க்க வரவில்லை என்று அதனை மூடுவிழா செய்துவிட்டனர். காலையில் டீக் கடையிலும் தெருமுக்குச் சந்தியிலும் ,ஊர்க் கதை, உலக நடப்புகளை அவர்களுக்குரிய பாணியில் பேசிக் கொண்டிருந்த கொற்கைவாசிகள் தினமும் அந்த அருங்காட்சியகத்திற்குள் சென்று தெருவாரியாக முறை வைத்து கையெழுத்தையோ,கைநாட்டையோ தினமும் போட்டுக் கொண்டிருந்திருந்தால் அருங்காட்சியகம் கொற்கையை விட்டு போயிருக்காது.மக்கள் வேண்டுகோளில் மதுக்கடையைத் திறக்கும் வேகம் கொற்கை அகழ்வைப்பக அருங்காட்சியகம் அமைப்பதில் வேகங் காட்ட வில்லை அரசு.மீண்டும் அகழ் வைப்பக அருங்காட்சியகம் அமைத்து கொற்கையில் அகழ்ந்தெடுத்த பொருட்களை அங்கேயே பாதுகாப்பது நம் முன்னோருக்கும் தமிழரின் பண்பாட்டிற்கும் செய்யும் சேவையாகும். .
உலகம் போற்றிய கொற்கைத் துறைமுகத்தின் தடயங்கள் எங்கே.. எங்கே ? . . . . என்று எதிர்கால நமது சந்ததியினர் தற்போது நாம் கேட்கும் கேள்வியை எழுப்புவார்கள் . தமிழன் தலைகுனிந்து பதில் கூறமுடியாமல் வெட்கி நிற்கத்தான் வேண்டும்.அகழ்வாய்வு செய்து கிடைத்த பொருட்களை குப்பையில் வீசியெறிந்ததைப் பார்த்து விட்டு,அரசியல் பேசிக்கொண்டு கொட்டாவி விடும் நம்மைப்போல் உலகில் எவரையும் காண முடியாது.
எது எப்படி ஆனாலும் கொற்கைத் துறைமுகத்துக்கு இணையாக எதுவுமில்லை.கொற்கை ஒரு அதிசயத்தின் அடையாளம்.
Comments
Post a Comment