அழகர்மலைப் பாறை ஓவியங்கள்: மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அழகர் மலையில் பஞ்சபாண்டவர் குகை என அழைக்கப்படும் குகையில் செந்நிறப் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்படுக்கை, தீர்தங்கரர் சிற்பம் போன்ற வரலாற்றுக்கு முதன்மையான பதிவுகள் உள்ளன. இவற்றைப்பார்க்க நாம் போயிருந்தபோது நமக்கு அருகிலுள்ள உப்போடைப்பட்டி எனும் ஊரைச்சேர்ந்த பூசாரி செல்வம் நமக்கு வழிகாட்டி அழைத்துச்செல்ல, உடன் அவரின் ஆறு வயது மன் பெரியகருப்புவும் ஆர்வத்துடன் வந்துக்கொண்டிருந்தான். இவற்றைக்காண்பதற்குச் செல்ல கற்களால் படிக்கட்டுகள் போன்று அமைக்கப்பட்டும், இரும்பு ஏணிகள் பொறுத்தப்பட்டும் உள்ள கடினமான பாதையில் செல்ல வேண்டும். மலையின் பெரியபாறைப் பகுதிகளுக்கிடையே இயற்கையாகவே அமைந்த அழகிய சுனையுடன் கூடிய குகையின் பாறைச்சுவரில் ஆங்காங்கே பதிமூன்று இடங்களில் சிவப்புநிறத்தில் வரையப்பட்ட ஓவியங்களைக் காணலாம். இவற்றுள் பல சிதைந்துவிட்டிருக்கின்றன. இவற்றுள் முதன்மையானவை மனித உருவமும், குதிரைப் போன்ற விலங்கின் மீதமர்ந்த நிலையிலுள்ள ஒருவனை மற்றொருவன் அழைத்துச்செல்வதுபோல வரையப்பட்டதும் ஆகும். இதில் மனித உருவத்தைப் பொருத்தவரை அந்த உருவம...