ஆறுமுகனேரியில் சுமார் 700 ஆண்டு பழமையான திருவாழிக்கல் மாயக்கூத்தன் பெயரிட்டது அறியப்பட்டுள்ளது
ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையிலில் ஓர் பழமையான எல்லைக்கல் இருப்பதறிந்த எம்.ராஜ்குமார் கூறியதன் பேரில், திருச்செந்தூர் அரசுஆண்கள் மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியர் அ.கார்த்திகேயன் அவருடன் வந்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர், அரசின் தொல்லியல் துறையின் கோடைகாலக் கல்வெட்டு பெற்ற முனைவர் த,த,தவசிமுத்து இதுகுறித்து கூறியதாவது ;
தற்போது ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் செல்லும் பெட்ரோல் பல்க் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் கிடைத்துள்ள திருவாழிக்கல்லில் கீழே உள்ள எழுத்துக்கள் வெள்ளைக்கல் என்பதால் அழிந்துள்ளன, இக்கல் சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதலாம். இக்கல்வெட்டில்’’ மாயக்கூத்தன்’ என்ற வரிகள் காணப்படுவது சிறப்பாகும்.திருவாழிக்கல் ( ஆழி – சக்கரம் ) பெருமாள் கோயில் வழிபாடு தடையற நடைபெறுவதற்காக முன்பு அக்காலத்தில் அரசு அதிகாரம் பெற்ற அலுவலரின் ஒப்புதலோடு வரி நீக்கி நிலம் மானியமாக வழங்கப்பட்டு, அந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்த எல்கைக் கல் ஆகும், நான்கரை அடி நீளமும் ஒரு அடி அகலமும் பின்புறம் சுமார் அரை அடி ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ளது, திருவாழிக்கல்லை ஏதேனும் காரணத்தால் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திலிருந்து தற்போதுள்ள இடத்தில் எடுத்து போட்டிருக்கலாம், தற்போது அந்த கல்லானது சரிந்து கிடப்பதால் எந்த இடத்தில் நட்டுவிக்கப்பெற்றது என்பதை அறிய இயலவில்லை,
நவதிருப்பதிகளுள் ஒன்றான பெருங்குளம் ஊரில் உள்ள பெருமாளின் பெயர் மாயக்கூத்தன் என்பதால்கிடைத்துள்ள திருவாழிக்கல்லுக்கும். பெருங்குளத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆய்வுக்குறியது,
பழங்காலத்தில் கோயில்களின் வழிபாட்டிற்காக அரசர்கள் நிலத்தை வரி நீக்கி தானமாக வழங்குவர் சிவன் கோயிலுக்குரிய நிலம் தேவதானம் எனப்படும். நட்டுவிக்கப்படும் கல்லில் திரிசூலம் பொறிக்கப்பட்டு நிலம் பற்றிய செய்தியும் எழுதப்பட்டு இருக்கும் அது சூலக்கல் எனப்படும். புத்த, ஜைன பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிலம் பள்ளிச்சந்தம் எனப்படும். பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு, மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவர் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். கல்வெட்டின் தொடக்கத்தில் மங்கலச் சொல் அமைந்திருக்கும். பெரும்பாலும் மங்கலச் சொல் ஸ்வஸ்திஸ்ரீ என இருக்கும். ஸ்ரீமது, சுபமஸ்து, நமசிவாய, சித்தம் என்ற சொற்கள் அமைந்துள்ள கல்வெட்டுகளும் உண்டு.
கல்வெட்டு எந்த அரசன் காலத்தைச் சேர்ந்ததோ பெருமைகள், போர் வெற்றிகள் முதலிய செய்திகள் மெய்க்கீர்த்தி பகுதியில் இடம்பெறும். இவ்வாறு மெய்க்கீர்த்திகள் மூலம் மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள முடியும்
கல்வெட்டில் மன்னர்களின் ஆட்சியாண்டு இடம் பெற்றிருக்கும். சில கல்வெட்டுகளில் கலியுகம், சாலிவாகன சகாத்தம், கொல்லம் போன்ற ஆண்டுகள் குறிப்பிடப்படும்.
இறைவனுக்கு அல்லது யாருக்கு, எதற்காக, கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் கொடைச் செய்தியில் குறிக்கப்படும். கொடையாக வழங்கப்பட்ட இடம் உள்ள நாடு, ஊர் முதலிய விபரங்களும், அதன் நான்கு எல்லைகளும் இதில் குறிக்கப்பட்டிருக்கும். வழங்கப்பட்ட கொடைக்குச் சாட்சியாக ஒருவரோ அல்லது சிலரோ கையொப்பம் இடுவர்.
அளிக்கப்பட்ட கொடையை காப்பாற்றுபவர்களுக்குப் புண்ணியமும், அழித்தவர்களுக்குப் பாவமும் வரும் என்பன போன்ற தொடர்கள் காப்புச் சொல் பகுதியில் எழுதப் பெற்றிருக்கும். கல்வெட்டை எழுதியவர்கள் பெயர் இறுதிப் பகுதியில் இருக்கும்.
இந்தக்கல்வெட்டில் மாயகூத்தன் என்ற வரிகள் மட்டுமே தெளிவாக உள்ளது மற்றவரிகள் தேய்ந்துள்ளன.
தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் இந்த திருவாழிக்கல்லை பாதுகாத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment