அழகர்மலைப் பாறை ஓவியங்கள்:
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அழகர் மலையில் பஞ்சபாண்டவர் குகை என அழைக்கப்படும் குகையில் செந்நிறப் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்படுக்கை, தீர்தங்கரர் சிற்பம் போன்ற வரலாற்றுக்கு முதன்மையான பதிவுகள் உள்ளன. இவற்றைப்பார்க்க நாம் போயிருந்தபோது நமக்கு அருகிலுள்ள உப்போடைப்பட்டி எனும் ஊரைச்சேர்ந்த பூசாரி செல்வம் நமக்கு வழிகாட்டி அழைத்துச்செல்ல, உடன் அவரின் ஆறு வயது மன் பெரியகருப்புவும் ஆர்வத்துடன் வந்துக்கொண்டிருந்தான்.
இவற்றைக்காண்பதற்குச் செல்ல கற்களால் படிக்கட்டுகள் போன்று அமைக்கப்பட்டும், இரும்பு ஏணிகள் பொறுத்தப்பட்டும் உள்ள கடினமான பாதையில் செல்ல வேண்டும். மலையின் பெரியபாறைப் பகுதிகளுக்கிடையே இயற்கையாகவே அமைந்த அழகிய சுனையுடன் கூடிய குகையின் பாறைச்சுவரில் ஆங்காங்கே பதிமூன்று இடங்களில் சிவப்புநிறத்தில் வரையப்பட்ட ஓவியங்களைக் காணலாம். இவற்றுள் பல சிதைந்துவிட்டிருக்கின்றன. இவற்றுள் முதன்மையானவை மனித உருவமும், குதிரைப் போன்ற விலங்கின் மீதமர்ந்த நிலையிலுள்ள ஒருவனை மற்றொருவன் அழைத்துச்செல்வதுபோல வரையப்பட்டதும் ஆகும். இதில் மனித உருவத்தைப் பொருத்தவரை அந்த உருவம் வரையப்பட்டிருக்கும் விதத்தை வைத்து மிகவும் பிற்காலமாகக் கருத முடியவில்லை.
குதிரைப்போன்ற விலங்கின் மீதமர்ந்த நிலையில் உள்ளவனை மற்றொருவன் அழைத்துச் செல்வதுபோன்ற தோற்றத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் கீழ்வாலை, கோழியூத்து, அணைப்பட்டி முதலிய இடங்களில் காணப்படுவதைப் பார்க்கும்போது. இது அக்காலத்தில் அவர்களிடமிருந்த பழங்கதைகளின் காட்சியாக இருக்கலாம் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. மற்றொரு ஓவியத்தில் ஏணியொன்று வரையப்பட்டுள்ளது. இவ்வேணியில் குறுக்கு குச்சிகளின் எண்ணிக்கை ஏழாகக் காட்டப்பட்டுள்ளது. இறந்தவர்களை புதைக்க எடுத்துச்செல்லும் பாடையும் இவ்வாறே ஏணிவடிவிலும் ஏழு குறுக்குக் குச்சிகள் வைத்தும் கட்டப்படுவதையும் இங்கு நாம் ஒப்பு நோக்க வேண்டியுள்ளது. கலைமானின் உருவம் இரண்டு இடங்களில் காணப்படுகிறது.
இக்குகைத் தளத்தின் மேல்பகுதியியான நெற்றிப்பொட்டிலும் கற்படுகை ஒன்றிலும் பழந்தமிழ் கலவெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.
’அழகர்மலை’ சங்ககால தமிழர் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பெயர்பெற்ற மலைகளில்ஒன்று.
சுனைக்கு மேலே தீர்த்தங்கரர் உருவத்துடன் கூடிய வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. அதில் ‘அச்சணந்தி செய்வித்த திருமேனி’ என்றுவெட்டப்பட்டுள்ளது. இந்த அச்சணந்தி முனிவர்தான் நின்றசீர் நெடுமாறனின் வெப்புநோய் தீர்ந்து சைவத்தை தழுவிய பிறகு ஏற்பட்ட தொய்விலிருந்து சமணத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் எனக்கூறப்படுகிறது.
இக்குகையிலுள்ள ஓவியங்களில் பெருமளவு அங்கு வரும் வரலாற்றின் இன்றியமையாமையைப் புரியாத வீனர்களால் தங்களின் பெயர், இலைவடிவப்படம், மன்மத அம்புப் போன்றவை வரையப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளது. மேல்பகுதியில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகள் அவர்களுக்கு எட்டவில்லை என்று விட்டுவிட்டார்கள் போலுள்ளது. இவர்களெள்ளாம் எப்போதுதான் திருந்துவார்களோ என்ற நினைப்புடனே மலையைவிட்டு இறந்க ஆரம்பித்தோம்.
(Rock paintings in red colour are seen at Azaharmalai near Madurai, Tamilnadu more than 2000 years old Tamil scripts are also present)
நன்றி
பாலா பாரதி
Comments
Post a Comment