திருமலாபுரம் குடைவரை | தென்காசி
தென்காசி மாவட்டத்தில் திருமலாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள இக்குடைவரைகள் கிபி எட்டாம் நூற்றாண்டளவிலான பாண்டியர் கால குடைவரையாக அறியப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் இவற்றுள் ஒன்று முற்று பெறாத குடைவரை.
கருவறையில் இலிங்கம் தாய்ப்பாறையிலே செதுக்கப்பட்டுள்ளது. அதன் முன்பு பாறையிலே செதுக்கப்பட்ட நந்தி சிலை சிதைக்கப்பட்டுள்ளது. பிரம்மா, ஆடற் கோலத்தில் சிவன், நின்ற நிலை திருமால், விநாயகர் மற்றுமிரு துவார பாலகர்கள் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. ( சொக்கம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் பாண்டியர் குடைவரைகளிலும் வேறு விதமான ஆடல் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன )
குடைவரை தூணில் ஒரேயொரு கல்வெட்டு காணப்படுகிறது. இடைக்காலப் பாண்டிய மன்னனான ஶ்ரீ வல்லபனின்( ? ) சிதைந்த கல்வெட்டு. படிக்க முயன்றது வரையில், அரசன் பாகனூர் கூற்றத்து சோழாந்தக சதுர்வேதி மங்கலத்து கோயிலுள்ளால் அழகிய பாண்டியன் கூடத்து பாண்டியராஜனில் வீற்றிருந்ததைக் குறிப்பிடுகிறது. இறுதி வரி கிணறு செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறது. குடைவரையில் சிறிய அளவு அழிந்து போன ஓவியங்கள் காணப்படுகின்றன.
மலையின் மற்றொரு பகுதியில் மற்றொரு முற்று பெறாத குடைவரை காணப்படுகிறது. சிற்பங்களும் தூண்களும் செதுக்கத் தொடங்கிய நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
மலையின் இன்னொரு பகுதியில் சிதைந்த ஒரு கோவிலின் பகுதியாக சாத்தன், பூர்ணிமா, புஷ்கலை ( 2 X ) மற்றும் யானை, நந்தி வாகனங்களும் காணப்படுகின்றன.
Comments
Post a Comment