Marirajan Rajan நன்றி
" குடவோலைத் தேர்தல் "
இது தேர்தல் நேரம்..
வழக்கமாய் இந்த நேரத்தில் ஒரு கல்வெட்டுச் செய்தியை பகிர்வோம்..
தமிழர்களின் பண்டைய குடவோலைத் தேர்தல் முறை. உத்ரமேரூர் கல்வெட்டு.
குடவோலைத் தேர்தல் முறை சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகிறது. காலத்தால் மிக மூத்த தொல்லியல் ஆவணமாக முற்கால பாண்டியன் மாறஞ்சடையனின் மானூர் கல்வெட்டு குடவோலை தேர்தல் பற்றிக் கூறுகிறது.
உத்ரமேரூர் பராந்தகச்சோழனின் கல்வெட்டு குடவோலை முறையை விரிவாகப் பதிவு செய்கிறது.
உத்ரமேரூர் ஊர்சபை
12 சேரிகளாகவும்., 30 குடும்புகளாகவும் ( வார்டு) பிரிக்கப்பட்டு வாரிய உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ..
1. ஆண்டு வாரியம்.
2. ஏரி வாரியம்.
3.பொன் வாரியம்.
4 பஞ்சவாரியம்.
போன்ற வாரிய உறுப்பினர்களாக ஊர்சபையின் பணியாளர்களாக இருப்பார்கள்..
இவ்வாரிய உறுப்பினர்கள் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் நிற்பதற்கானத் வேட்பாளர்களின் தகுதி.
தேர்தல் நடைபெற்ற முறை ஆகிய செய்திகள் விரிவாகக் கல்வெட்டில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டுச் செய்திகளை விரிவாக பார்க்க இருக்கிறோம்.
அதற்கு முன்பாக ஒரு விடயத்தை தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது.
சமீப காலத்தில் ஒரு பெரும் உருட்டு ஒன்றை உருட்டுகிறார்கள்.
உத்ரமேரூர் கல்வெட்டு என்றாலே அது பார்ப்பனர்களுக்கானத் தேர்தல். பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதுவா மக்களாட்சி.?
என்று பொங்கி எழுவார்கள்..
நிச்சயம் இது தவறான,ஆதாரமற்ற வன்மமான யூகமானக் குற்றச்சாட்டு .
தேர்தலில் நின்றவர்கள் பார்ப்பனர்கள் மட்டும் என்று கல்வெட்டில் இல்லை..
சதுர்வேதி மங்கலம் என்றாலே பார்ப்பனர்கள் மட்டும்தானே இருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்புவார்கள்..
உண்மைதான்..
நான்கு வேதங்களை கற்ற தூய்மையான எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாத பார்ப்பனர்களின் வாழ்வாதரத்திற்காக அரசு நிலம் வழங்கும். இந்நிலத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்கு வரி கிடையாது. இதுதான் சதுர்வேதிமங்கலம்.
ஆனால்...
தேர்தலில் நிற்பவர்களின் முதல் தகுதியே, சொந்தமாக வரிகட்டக்கூடிய கால்வேலி நிலம் இருக்கவேண்டும்..
சதுர்வேதிமங்கல பிராமணர்களோ வரிஇல்லா இறையிலி நிலம் வைத்திருப்பார்கள். ஆகவே சதுர்வேதிமங்கலத்து பிராமணர்கள் தேர்தலில் நிற்பதற்கே தகுதியற்றவர்கள்.
சதுர்வேதிமங்கலத்தில் பிராமணர்கள் மட்டும் குடியிருப்பார்களா.?
இதுவும் தவறு.
சதுர்வேதி மங்கலத்தில் பிராமணர்கள் மற்றும் அனைத்து சமூக மக்களும் குடியிருந்தனர். ஏராளமான சான்றுகள் உண்டு.
உதாரணமாக ..
மூன்றாம் இராஜராஜனின் திருமானிக்குழி கல்வெட்டு.
' ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து தென்பிடாகை மணற்குடியிருக்கும் ஊர்பறையன் மண்டை சோமனான ஏழிசை மோகப்படைச்சான் " என்பவர் கோவிலுக்கு நிவந்தம் வழங்குகிறார்.
( S.i.i.vol 7 no 794)
அதாவது சதுர்வேதிமங்கலத்தில் பிராமணர், பறையர் உள்ளிட்ட அனைத்தும் சமூகத்தினரும் குடியிருந்தனர்.
வேத சாஸ்திரங்களைக் கற்றவர்கள் பார்ப்பனர்கள் மட்டும்தானே....
இதுவும் தவறு...
வேத சாஸ்திரங்களை பார்ப்பனர்களும் மற்றும் அனைத்து சமூகத்தினரும் கற்றனர்.
ஏராளாமான கல்வெட்டுச்சான்றுகள் உண்டு.
சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றில் கையெழுத்துப்போட தெரியாமல் கைரேகை இட்ட (தற்குறி) பிராமணர்களும், எழுத்தால் கையெழுத்துப்போட்ட மற்ற சமூகத்தினரும் உண்டு. ( புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண் 421)
கல்வியறிவு என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து சமூகத்தாருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது...
முடிவாக...
உத்ரமேரூர் சதுர்வேதிமங்கல ஊர்சபை குடவோலைத் தேர்தல் என்பது பார்ப்பனர்களுக்கு அல்ல.. அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய பொதுவான ஊர்சபை தேர்தல் என்று உறுதியாகக் கூறி...
உத்ரமேரூர்..
குடவோலைக் கல்வெட்டின் விபரங்களைப் பார்ப்போம்..
---------------------------------------
உத்ரமேரூர்.. கல்வெட்டு..
மதுரைகொண்ட கோபரகேசரியான முதலாம் பராந்தகனின்
கல்வெட்டு. இரண்டு கல்வெட்டு..
அவரது 12 ஆம் ஆட்சியாண்டு..
( கி.பி.919)
மற்றும்.
அவரது 14 ஆம் ஆட்சியாண்டு.
( கி.பி.921)
தேர்தலில் நிற்பதற்கான வேட்பாளர்களின் தகுதிகள்..
முதல் கல்வெட்டு.
1. சொந்தமாக கால் வேலி வரி கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்.
2. தனக்குச் சொந்தமான மனையில் வீடு கட்டப்பட்டிருக்க
வேண்டும்.
3. 30- 60 வயதுக்குள் இருக்கவேண்டும்.
4. வேத, சாஸ்திரத்திலும் எந்த ஒரு காரியத்திலும் வல்லவராக இருக்கவேண்டும்.
5. நல்ல வழியில் சேர்த்த செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் உடையவராக இருக்கவேண்டும்.
6. கடந்த கால தேர்தலில் பங்கேற்று வாரியத்திலும் உறுப்பினராக இருந்தவர்கள் இம்முறை தேர்தலில் நிற்கக் கூடாது.
7. கடந்தமுறை வாரிய உறுப்பினராக இருந்தவர்களின் நெருங்கிய உறவினர்களும் இம்முறை தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை.
இரண்டாம் கல்வெட்டு ..
1. கால் வேலிக்கு அதிகமான வரி செலுத்தக்கூடிய சொந்த நிலம் இருக்க வேண்டும்.
2. தனது சொந்த நிலத்தில் சொந்தமாக வீடு இருக்கவேண்டும்.
3. வயது 35 - 70 க்குள் இருக்க வேண்டும்.
4. வேத சாஸ்த்ரம். அறிந்து அதைப் பிறருக்கு கற்பிக்கும் திறன் பெற்றவராய் இருக்கவேண்டும்.
5. கால்வேலிக்கு குறைவாக நிலம் இருப்பவர், ஒரு வேதம் நான்கு பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
6. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
7. கடந்த முறை எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது.
8. கடந்தமுறை வாரிய உறுப்பினராக இருந்தவர்களின். நெருங்கிய உறவினர்கள் இம்முறை தேர்தலில் நிற்க இயலாது.
9. வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாதவர்களின் உறவினர்களும்.. அவரது தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரிமக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் . ..
இவர்களும் தேர்தலில் நிற்க இயலாது.
10. பஞ்சமா பாதகங்கள் செய்தார், பாவம் செய்தவர்கள், கையூட்டுப் பெற்றவர்கள்..
குற்றம் செய்து அதற்காக பரிகாரம் செய்தோர்...
இவர்களும் இவர்களது உறவினர்களும் தேர்தலில் நிற்க இயலாது.
11.கொலைக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர், அடுத்தவர் பொருளை களவு செய்தவர் , ஊர் மக்களுக்கு விரோதி... இவர்களும் தேர்தலில் நிற்க இயலாது.
12. குற்றம் செய்து கழுதை மீது ஏறியோர், பொய் கையெழுத்திட்டோர்....
இவர்களும் தேர்தலில் நிற்க இயலாது..
"தேர்தல் நடக்கும் முறை.."
மேற்கண்ட தகுதிஉடைய வேட்பாளர்கள் ஒவ்வொறுவரின் பெயர்களைத் தனித்தனியே ஒரு ஓலையில் எழுதி ஒரு குடத்தில் போடுவார்கள்..
ஊர் சபையில் உள்ள அனைவரும் கூடியிருக்கும் ஒரு பொதுமேடையில்., ஊரில் உள்ள பெரியோர்கள் முன்னிலையில்,
வயோதிகராய் உள்ள ஒருவர் ஓலை இடப்பட்டுள்ள குடத்தைத் தூக்கி எல்லோரும் நன்கு காணுமாறு மக்களிடம் காட்டுவார்.
அதன்பிறகு
அக்குடத்திலிருக்கும் ஓலைகளை வேறொரு குடத்தில் போட்டு நன்றாக் கலக்குவர்.
பின் ஏதும் அறியாத ஒரு சிறு பிள்ளையை அழைத்து ஒரே ஒரு ஓலையை மட்டும் எடுக்கச்செய்வர்.
எடுத்த ஓலையை சபையின் நடுவர்
தனது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையில் வாங்குவார்.
வாங்கிய ஓலையை அவர் வாசிக்கவேண்டும்.
ஓலையில் இருக்கும் நபர் வாரிய உறுப்பினராக அறிவிக்கப்படுவார்.
இவ்வாறே முப்பது குடும்பிற்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது கடமைகளை ஆற்றுவர்.
ஏறக்குறைய 1100 ஆண்டுகளுக்க்கு முன்பு.. ஒரு சரியான நேர்மையான தேர்தல் ஒன்று.. தமிழர்களின் தொல்லியல் ஆவணமாக பதிவுசெய்யப்பட்ட வரலாறு..
அன்புடன்..
மா.மாரிராஜன்..
Comments
Post a Comment