சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்
சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக்
கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம்
கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம்
, குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி
, குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில்
கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள்
ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது
. ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில்
உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள்
அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை
முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா
நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்படுகிறது . 5000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை முத்து
வியாபாரம் கொடிகட்டிப் பறந்ததை அறிய முடிகிறது .
சங்ககாலப்பாடல்கள் , அக்கால மக்களின் பண்பாடுகள்
, அரசியல் வாழ்வியற் செய்திகளின் காலக்கண்ணாடியாக காட்டுகின்றன . தமிழ் மண்ணின் சிற்ப்புகளை
தமிழனின் நாடித்துடிப்பாக விளங்கும் இலக்கியங்கள் இனிமையாகக் குறிப்பிடுவதைப் பார்ப்போம்
.
கொற்கைத் துறைமுக
நகரின் கடற்கரையில் தாழை மரங்களின் சோழையும் அவற்றின் பூக்களின் மணமும் , கடற்கரையில்
இயல்பாக வீசும் மீன் நாற்றத்தைப் போக்கியது .
“ முண்டகம் கெழீஇய மோட்டுமணல் அடைகரைப்
பேஎய்த் தலைய பிணர்அரைத்
தாழை
எயிறுடை நெடுந்தோடு
காப்பப் பலவுடன்
வயிறுடைப் போது
வாலிதின் விரீஇப்
புலவுப் பொருதழித்த
பூநாறு பரப்பின்
நற்றோர் வழுதிக்
கொற்கை முன்னுறை “ – அகநானூறு -130
மதுரைப் பாண்டியர்கள்
கொற்கைக் கோமான் , கொற்கைஇ பொருநன் என்றும்
சிற்பிக்கப்பட்டனர் .
“ பேரிசைக் கொற்கைப் பொருநன் வென்வேல்
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை “ – அகநானூறு
– 296
கொற்கை முத்துக்களை
அணிகலனாக்கி அணிவதை பிறநாட்டவர்கள் பெரிதும் விரும்பினர் முத்துச்சிப்பிக்களையும் சங்குகளையும்
முத்துக்குளிப்போர் அள்ளிக்கொண்டு வந்து விற்றனர் .
“ பன்மீன் கொள்பவர்
முகந்த இப்பி
நாரரி நறவின்
மகிழ்தொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கை
“ – அகநானூறு – 296
முத்துக்குளிக்கும் பொழுது கடலினுள் சுறா மீன்கள் தாக்கி , ஆபத்து
ஏற்படாமலிருக்க “ சுறா வசியம் “ மந்திரம் கூறி , முத்துக்களை அள்ளியிருக்காங்க. .
“ இலங்கிரும்
பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய
வான்திமில் பரதவர்
ஒலிதலைப் பணிலம்
ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை
“ – அகநானூறு – 350
கொற்கைத்துறைமுகம் பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பின் அடையாளமாகத்
திகழ்ந்தது . கடலலைகளால் முத்துக்கள் இழுத்து வரப்பட்டு கடற்கரையில் ஒதுங்கின . அவ்வழியே
சென்ற குதிரைகளின் கால்களில் அந்த முத்துச்சிப்பிகளும் முத்துக்களும் மோதின . இதனால்
குதிரையின் வேகம் தடைபட்டதாம்.எப்படிப்பட்ட வருணனை பாருங்க. .
“ இவர்திரை தந்த
ஈரங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக்
கால்வடுத் தபுக்கும்
நற்றோர் வழுதிக்
கொற்கை முன்றுறை – அகநானூறு ; 130
பாண்டிய மன்னர்கள் மக்களைக் காக்கும் நல்லறத்தின் வழி நிற்கும்
கொற்கை முத்து போன்றவர்கள்
” மற்ப்போர்ப்
பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையும்
பெருந்துறை முத்து ” – அகநானூறு : 211
கொற்கை முத்துக்களின் ஒளி சூரியக்கதிர் போன்றது
” புகழ்மலி சிற்ப்பின்
கொற்கை முன்னுறை
அவிர்கதிர்
முத்தம் “ – அகநானூறு : 201
கொற்கைத் துறைமுகத்தில் பெருமை வாய்ந்த பௌர்ணமி வழிபாட்டைக்
கொற்கை மகளிர் செய்தனர்.வழிபாட்டில் முத்துக்களையும் வலம்புரிச் சங்கினையும் படைத்தனர்..
” மகிழ்மலி சிற்ப்பின்
கொற்கை முன்னுறை
அவிர்கதிர்
முத்தாமாடு வலம்புரி சொரிந்து
பழையவர் மகளிர்
பனித்துறை பரவப்
பகலோன் மறைந்த
அந்தி ஆரிடை
உருகெழு பெருங்கடல்
உவவுக் கிளர்ந்தாங்கு “ – அகநாஅனூறு : 250
துறைமுகத்தால் கொற்கைக்குச் சிறப்பேற்பட்டது . உப்பு வணிகரின்
வீட்டிலிருந்த குழந்தைகள் கடற்கரையில் காணப்படும் கிளிஞ்சல்களையும் , கிலுகிலுப்பையையும்
அசைத்து ஒலியெழுப்பி விளையாடினர் . அதனைக் கண்ட குரங்குக் குட்டி கடற்கரையில் கிடந்த
கிளிஞ்சல்களை எடுத்து , அதனுள் கடலலையால் ஒதுங்கிக்கிடக்கும் முத்துக்களை எடுத்துப்போட்டு
கிலுகிலுவென அசைத்து மகிழ்ந்தது . முத்துக்கள் அங்கும் இங்கும் கைக்குள்ளேயும் காலுக்குள்ளேயும்
கிடந்திருக்கு.
“ நோன் பகட்டுமணர்
ஒழுகையோடு வந்த
மகாஅர் அன்ன
மந்தி மடவோர்
நகாஅர் அன்ன
நளிநீர் முத்தம்
வாள்வாய்
எருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற
மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளரியல்
ஜம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர்பூண்
புதல்வரொடு கிலுகிலுயாடும்
தத்துநீர்
வரைப்பின் கொற்கைக் கோமான் “
- சிறுபாணாற்றுப்படை
: 56 - 62
கொற்கைத் துறைமுகம் பண்பாடுமிக்க மிகப்பழமையான ஊர் . இங்கு உலகம்
போற்றும் உயர்வகை முத்துக்கள் விளைகின்றன ,
” பேருலகத்து
மேஎந் தோன்றிச்
சீருடை
விழுச்சிறப்பின்
விளைந்து
முதிர்ந்த விழுமுத்தின்
இலங்குவளை
இருஞ்சேரிக்
கட்கொண்டிக்
குடிப்பாக்கத்து
நற்கொற்கை
“ - மதுரைக்காஞ்சி : 133 -138
கொற்கையில் முத்துக்கள் குவியல் குவியலாகக் கிடைத்தன .
“ முத்துப்படு
பராப்பின் கொற்கை முன்றுறை ” – நற்றிணை :131
மணிமேகலையின் வரலாற்றைக் கூறும் “ மணிமேகலை “ காப்பியத்தில் கொற்கையில் பொன்னாலான தேரோடியது என்பதை,
“ பொற்றோர்ச்
செழியன் கொற்கையம் பேரூர் “
- மணிமேகலை , ஆபுத்திரன் திறன் அறிவித்தகாதை
– 84
என்ற பாடல் அடியும் கொற்கைத் துறைமுகத்தின்
பெருமையை உணர்த்துகிறது .
பாண்டிய மன்னனின் சிறப்பை பறைசாற்றும் விதத்தில்
கொற்கை முத்து போற்றப்பட்டது . பாண்டி நாடென்றால் “ முத்தும் முத்தமிழும் “ என்ற சொல்லாட்சி
ஏற்பட்டது . தமிழகத் தொல்லியல் வரலாற்றில் பாண்டியர்களின் ஆட்சியின் பெருமையை எடுத்துக்
கூறுவது , “ வேள்விக்குடிச் செப்பேடு ஆகும். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
என்பவன் வேள்விக்குடி என்ற ஊரில் சிறப்பு வாய்ந்த வேள்வி ஒன்றைச் செய்தான் . உலகம்
போற்றிய அவ்வேள்வியை நிறைவு செய்தவன் “ கொற்கை “ யைச் சேர்ந்த நற்கொற்றன் என்பவன்
.
சோனகர் , யவனர் , எகிப்தியர் , அராபியர் மற்றும்
பல நாட்டு வணிகர்களும் அரசியல் தூதர்களும் வலம் வந்த சிறிய கப்பல்களின் ஒலியும் கொற்கைக்குடாவின்
அலைகளற்ற கடலும் , தமிரபரணி பொருநை ஆறு மெல்ல நடந்து வந்து கலந்து நின்ற பொலிவும்
, கதவுகளற்ற முத்து வியாபாரக் கடைகளின் ஒலிகளும் இன்றும் மலரும் நினைவுகளாக வந்து செல்கின்றன
. மன்னன் மதுரைத் தலைநகரிலிருக்க , இளவரசன் கொற்கைத் துறைமுகத்தின் ஏற்றமிகு நிர்வாக
வருவாயைப் பார்த்து வந்தான் . சுனாமியின் இயற்கைத் தாண்டவத்தால் கடலலைகள் மணலை அள்ளிக்
குவித்தன . தாமிரபரணியும் மண் அள்ளிக் குவித்தது . இத்தகைய சீற்றத்தால் ஜந்து மைல்
தூரம் உள்வாங்கியிருந்த கொற்கைக்குடா மண்மேடிட்டுப் போனது . என்னே.. பரிதாபம் இயற்கைத்
துறைமுகம் என்ற கட்டமைப்பை இயற்கையேப் பறித்தெடுத்தது .
கி.பி.1992இல் தென்தமிழகம் வருகைதந்த இத்தாலியைச்
சேர்ந்த மார்க்கோபோலோ “ பழையகாயல் “ துறைமுகத்தில் கப்பலேறியதாகத் தம்முடைய பயணக் குறிப்பேட்டில்
பதிவு செய்துள்ளார் . அவரது குறிப்பின்படி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை கொற்கைத்துறைமுகம்
இருந்துள்ளது .
கொற்கைப் பொழிவிழந்து மண்மேடான பின்பு பழையகாயல்
இயற்கையான துறைமுக அமைப்பைக் கொண்டிருப்பதால் “ துறைமுகம் “ என்ற உயர்நிலையைப் பெற்றது
. கடல்கோளினால் பழையகாயல் துறைமுகம் தூர்ந்து போயிற்று . தாமிரபரணி ஆற்றின் கரையோரமிருந்த
இரண்டாவது துறைமுகம் மறைந்துபோனது . கி.பி.1580 இல் போர்ச்சுக்கீசியர்களால் தூத்துக்குடி துறைமுகம் தொடங்கப்பெற்றது
.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகம் போற்றும்
“ துறைமுகம் “ என்ற சிறப்பை தூத்துக்குடி மாவட்டம்
(குடநாடு) தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. .
கொற்கையில் அகழ்வாய்வு செய்து அங்கு கிடைக்கப் பெற்ற
அரிய பொருட்களை கொற்கையில் அருங்காட்சியகம் அமைத்து அங்கேயே பாதுகாத்திடுவது நம் முன்னோருக்கும்
தமிழரின் பண்பாட்டிற்கும் செய்யும் சேவையாகும். .
உலகம் போற்றிய கொற்கை எங்கே ? . . . . என்று எதிகால
நமது சந்ததியினர் தற்போது நாம் கேட்கும் கேள்வியை எழுப்புவார்கள் . தமிழன் தலைகுனிந்து
பதில் கூறமுடியாமல் வெட்கி நிற்கத்தான் வேண்டும்.அகழ்வாய்வு செய்து கிடைத்த பொருட்களை
குப்பயில் வீசியெறிந்துவிட்டு கொட்டாவி விடும் தமிழக அரசின் தொல்லியல்துறை.
Comments
Post a Comment