நடராசர் கோயில் நடனச் சிற்பங்கள்
தில்லை நடராசரையும், கோவிந்தராசரையும் பற்றி நிறையவே பேசி விட்டோம்.
தீஷிதர்களைப் பற்றியும் இப்போது பேசி வருகிறோம். இருக்கட்டும்.
கொளுத்தும் வெயிலில் ஒருநாள் இக்கோயிலுக்கு நான் சென்றிருந்தேன். கிழக்குக் கோபுரத்தின் வாயிலில் சிறிதுநேரம் நின்றேன். என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள...
ஆஹா... என்னக் காற்று! என்னைத் தாலாட்டியது. அந்தக் காற்றுக்கு மயங்காத நான், சற்றுத் வடக்குச் சுவர்ப் பக்கம் திரும்பியதும் மயங்கினேன்.
கீழிருந்து மேல்வரைச் சிற்பங்கள். மேலே பார்க்கக் கழுத்து வலித்தது. சற்றுத் திரும்பினால் தெற்குச் சுவற்றிலும் சிற்பங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறானவை.
இந்தக் கிழக்குக் கோபுரத்தைக் எழுப்பியவன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243-1279) என்பார் ஆய்வறிஞர் நடன.காசிநாதன். (நூல்: காடவர் வன்னியர் வரலாறு)
“நாலு திக்கிலிமிருந்து வேந்தர்களை வென்று அவர்களின் செல்வத்தைக் கைக் கொண்டு துலாபாரம் நடத்தி, அப்பொன்னால் மேருமலையைப் போன்ற கிழக்குக் கோபுரத்தை இரண்டாம் கோப்பெருங்சிங்கன் தன்பெயரால் எடுத்தான். அக்கோபுரத்தின் நான்கு பக்கங்களையும் அவன் ஒளிமயமாக நிர்மாணித்து குடமுழுக்குச் செய்தான்” எனும் தகவல்களை திரிபுராந்தகக் கல்வெட்டுத் தெரிவிப்பதாகச் சொல்லும் டாக்டர் எம்.எஸ்.கோவிந்தசாமி, “இத்திருப்பணி கி.பி.1262-ம் ஆண்டிற்குள் நடைபெற்றிருத்தல் வேண்டும்” என்பார். (நூல்: வரலாற்றில் சிதம்பரம் நடராஜர் கோயில்)
இவ்வரசன் காலத்தில்தான் தில்லைக் காளியம்மனுக்கும் கற்றளி எடுக்கப்பட்டது.
கிழக்குக் கோபுரத்தில் மட்டுமல்ல தில்லைத் தலத்தின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்குக் கோபுரங்களிலும்கூட நடனச் சிற்பங்கள்.
இவை பற்றி மிகவும் ஆய்வு செய்த டாக்டர் பத்மா சுப்ரமணியம்,
“இந்த நான்கு கோபுரங்களிலும் 108 கரணங்களும் பரதமுனிவர் கூறிய அதே வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோபுர வாயிலிலும் இருபக்க சுவர்களிலும் ஏழு தூண்களில் அர்த்த சிற்பங்களாக இவை காணப்படுகின்றன. முதல் தூணின் கீழிருந்து மேலாகக் கரண சிற்ப வரிசை துவங்குகிறது. ஏழாவது தூணின் அடியிலிருந்து மீண்டும் மேல்நோக்கி இவ்வரிசை தொடர்கிறது. வடக்குக் கோபுரத்தைத் தவிர மற்ற கோபுரங்களில் வரிசை கிரமம் எவ்வித சீர்குலைவும் இல்லாமல் இந்த வரிசை கிரமத்திலேயே விளங்குகிறது. கிழக்கு, மேற்கு கோபுரங்களில் பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் எழுதப்பட்ட கரணக் கோட்பாடுகளான வடமொழி சுலோகங்கள் அந்த கரணச் சிற்பத்திற்கு மேல் சோழர்காலத் தமிழ் கிரந்த எழுத்தில் வெட்டப்பட்டிருக்கின்றன” எனும் தகவல்களைத் தருகிறார்.

நான்கு கோபுரங்களிலும் காணப்படும் நடனச் சிற்பங்களின் வரிசை மாறாத் தன்மையைக் கொண்டு, இக்கோபுரங்கள் ஏறத்தாழ சம காலத்தவை (கோப்பெருஞ் சிங்கன் காலம்) எனும் முடிவுக்கும் வந்திருக்கிறார், டாக்டர் பத்மா சுப்ரமணியம். (நூல்: வரலாற்றில் சிதம்பரம் நடராஜர் கோயில்)
கோபுரங்களிலும் மட்டுமல்ல நிருத்தச் சபை, ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் சிற்பங்கள் நிறைந்துள்ளனவாம்.
எனக்கு நாட்டிய-சிற்பக் கலைகளைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. ஆனால் அவற்றை நேசிக்கவும், வரலாற்றுத் தகவல்களை வாசிக்கவும் மட்டுமே தெரியும்.
இந்த ஈடுபாடுதான், கிழக்குக் கோபுரச் சிற்பங்களை மெய் மறந்து இரசிக்கச் செய்தது.
என்னைப் போல எத்தனைப் பேர் தில்லை நடராசர்க் கோயில் சிற்பங்களை இரசித்தார்கள்- இரசிக்கிறார்கள் என்று தெரியாது.
ஆனால், கோபுர வாயிலைக் கடந்துச் செல்லும் பலரும் என்னை ஒருவாறு பார்த்துச் சென்றதை மட்டும் என்னால் உணர முடிந்தது! நன்றி கட்டுரையாளர் -கோ.செங்குட்டுவன்
Comments
Post a Comment