கழுகுமலைக்
குடைவரைச் சிற்பங்கள்
எப்படித்தான்
இதையெல்லாம் செதுக்கினாங்க . . . . வெட்டியெடுத்தாங்க . . . . அழகின் உச்சியில் மலையுச்சி
கழுகுமலை அற்புதம் ! .
தூத்துக்குடி மாவட்டத்தில்
,.அங்குள்ள கலைத் திறத்தால் காண்போரை மலைக்க வைக்கும் மலை கழுகுமலை .கோவில்பட்டி நகரத்தில்
இருந்து 20 கி.மீ தூரத்தில்உள்ளது.அரைமலை என்றும் இதற்கு மற்றொரு பெயருண்டு..
இங்குள்ள ஒரே பாறையைத்தான்
குடைந்தெடுத்து’’ஒற்றைக்கல் வெட்டுவான் கோயில்’’என்றும் ‘’தென்னகத்தின் எல்லோரா’’
‘’நெல்லையில் மல்லை’’என்று அனைவராலும் போற்றப்படுகிறது.
தனிப்பாறைகளைக்
குடைந்தும்;செதுக்கியும் மாமல்லபுரத்தைக் கலைக்கூடமாக்கியதால் அதனைச் செய்த பல்லவ மன்னர்கலூக்கு
அழியாப்புகழ் கிடத்தது.
.கழுகுமலையில்
[ மோனோலித்திக் ] ஒற்றைக்கல் மலையைக் குடைந்து செதுக்கியதால் பாண்டிய மன்னர்களுக்கும்,தூத்துக்குடி
மாவட்டத்திற்கும் குன்றாதப் பெருமை சேர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல்
துறையின் பாதுகாப்பில் இக்கலைப் படைப்புகள் உள்ளன. குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய
தமிழரின் மிகப்பழமையான சின்னம் இது..
வெட்டுவான் கோயில்
, சமனப்பள்ளி , புடைப்புச்சிற்பங்கள் , குடைவரைக்கோயில் , சமணத்தீர்த்தங்க ஏரி ஆகியனவும்
1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழனின் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் நமக்கு ஆச்சரியமாக
இருக்குதுங்க..
ஒற்றைக்கோயில்
, குடைவரைக்கோயில் , கட்டிடக்கோயில் எனும் மூவகைப்பாணியிலான கட்டிடக்கலைக்கும் கழுகுமலை
எடுத்துக்காட்டாக உள்ளது .
இங்குள்ள முதலாம்
இராஜேந்திரசோழனின் மகன் சுந்தரச்சோழனின் கல்வெட்டு , (A.R.No.18 of 1894) இவ்வூர் இராஜ
இராஜப்பாண்டி நாட்டு முடிகொண்ட சோழவளநாட்டு நெச்சுறநாட்டுப் பிரிவில் இருந்துள்ளது
என்றும் , இவ்வூரின் பெயர் “திருநெச்சுறம்” என்றும் கூறுகின்றது . சமணப் பள்ளையில்
உள்ள தீர்த்த்ங்கரர்களுடைய புடைச்சிற்பங்களுக்குக் கீழே உள்ள கல்வெட்டுக்களும் இவ்வூரை
“திருநெச்சுறம்” என்றே வழங்குகின்றது . நின்றசீர் நெடுமாறபாண்டியன் காலத்தில் சமணர்கள்
இம்மலையில் கழுகேற்றப்பெற்றக் காரணத்தால் கழுமலை என்றழைக்கப் பெற்று பின்பு கழுகுமலை
என்று திரிபு ஆனது . .
வெட்டுவான்
கோயில் (ஒற்றைக்கல் கோயில்)
மாமல்லபுரத்தில் தனித்தனிப் பாறைகள்
குடையப்பட்டுச் சிற்பங்களாக , ரதங்களாக மாறின . கழுகுமலையில் தனிப்பாறையில்லாததால்
மிகப்பெரிய மலையைக்குடைந்து சுமார் 25 அடி ஆழத்தில் ஒற்றைக்கல் கோயில் செதுக்கப்பட்டுள்ளது
. பல்லவர்களுடைய சமகாலத்தில்தான் பாண்டிய மன்னனால்
இக்கலைபடைப்பு உருவாயிருக்கு. . இக்கோயிலைச் செதுக்கிய சிற்பி , அவரது தந்தையின் கைகளினால்
வெட்டுப்பட்டு இறந்த சோகத்தை நினைவு படுத்தும் விதத்தில் “ வெட்டுவான் கோயில் “ என
மக்கள் பேச்சு வழக்கில் அழைக்கின்ற்னர் .
கோயிலின் திருச்சுற்றுப்பாதை
மேலிருந்து 3 அடி அகலத்தில் நுட்பமாகக் குடையப்பெற்று நடுவிலுள்ள கோயில் ஒற்றைக்கல்
கோயிலின் தோற்றத்தைத் தருவது அற்புதக் காட்சியாகும் . ஒற்றைக்கல் கோயில் செதுக்கப்படும்
பொழுது மேலிருந்து கீழ்நோக்கியேச் செதுக்கப்பட்டு வரும் .
அதனடிப்படயில் தற்போது
இக்கோயிலின் கூரைப்பகுதி முழுமை பெற்றுள்ளது . விமானம் எண்பட்டை அமைப்புடன் அழகிய பூ
வடிவத்துடன் அமைக்கப்பட்டுள்ள்து. எப்படித்தான் செதுக்கினாங்க…பென்சிலைச் சீவுன மாதிரி
ஆச்சரியமா இருக்கு.விமானத்தின் கழுத்துப்பகுதியில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் அமர்ந்து
காட்சி தரும் சிற்பத்தின் கலைநயம் போற்றுதலுக்குரியது . தெற்குமாடத்தில் தட்சிணாமூர்த்தியுடன்
வடிவம் உள்ளது . வழக்கமாக யோகமூர்த்தியாகவோ , ஞானமூர்த்தி வடிவமாகவோ அமைப்பர் . வீணை
ஏந்திய வடிவத்திலும் இருப்பார் . ஆனால் இங்கு மிருதங்கம் வாசிக்கும் “ மிருதங்க தட்சிணாமூர்த்தியாக
“ உள்ளார் . உலகில் வேறெங்கும் இத்தகைய அற்புதப் படைப்பு இல்லை . விமானத்தின் மேற்குப்பகுதியில்
நரசிம்மரும் வடக்குப்பகுதியில் நான்முகனும் உள்ளனர் . நான்கு மூலைகளிலும் நந்திபகவான்
உள்ளார் . விமானத்தின் கழுத்துப்பகுதிக்குக் கீழே யாழியின் சிற்பம் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது
. இது யாழிவரியாகும் . தொடர்ந்து அழகுட்டும் கொடுங்கை அமையும் அதில் உள்ள கூடுகளுள்
கந்தர்வர்களின் தலை காட்டப்பட்டுள்ளது . கொடுங்கைக்குக் கீழே பூதகண வரிசை இடம் பெற்றுள்ளது
. இக்கணங்களின் முகத்தை உற்று நோக்கினால் சிற்பியின்
உளி அக்கணங்களுக்கு உயிர் கொடுத்தது போலத் தெரியும் . ஆம் ! அவற்றுள் மகிழ்ச்சி , வீரம்
, கோபம் , சோகம் , வெளிப்படுவதைக் காணலாம்
. நடனமாதர்களின் சிற்பம் கலையம்சத்துடன் மனதைக்
கொள்ளை கொள்ளும் . கருவறை , அர்த்தமண்டபம் முழுமை பெறாத நிலையில் இருக்கு. கருவறையினுள்
பிற்காலத்தில் விநாயகரின் சிலை அமைக்கப்பட்டுள்ள்து .
சமணர்
கோயில்
சமணர்களுடைய கோயிலை பள்ளி என்றழைப்பாங்க , மலையின் மேல் முனிவர்களின்
புடைப்புச் சிற்பங்கள் பாறைகளில் திறந்தவெளியில் எழிலாக அமைந்துள்ள்து . சமணத் தீர்த்தங்கரர்கள் அர்த்த பத்மாசனத்தில்
யோக நிலையில் அமர்ந்தவாறு அருகில் இருயட்சர்கள் சாமரம் வீசுவது போல அமைக்கப்பட்டுள்ளது
. அச்சிற்பங்களுக்குக் கீழே அச்சிற்பம் எவருக்காக உருவாக்கப்பட்டது என்ற செய்தி வட்டெழுத்துக்களால்
கொடுக்கப்பட்டுள்ளது . சமணர்களின் தெய்வம் அரைமலை ஆழ்வார் , திருமலை தேவர் என்றும்
அழைக்கப்பட்டுள்ள செய்தி அதில் உள்ளது. . சமணத் துறவிகள் குரவர் , குரவடிகள் எனவும்
பெண்துறவிகள் குரத்தியர் என்றும் வழங்கப்பட்டனர் . சமணர்களுடைய கல்வி நிறுவனம் [பள்ளிக்கூடம்]
நடந்திருக்கு.இங்கு பாடம் படிக்க வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்திருக்காங்க. இம்மலைப்பாறையில்
98 கல்வெட்டுக்கள் ( A.R.No.20 of 1984 முதல் A.R.No.117 of 1894 வரை ) காணப்படுகின்றன
.
குணசாகரப்பட்டாரர் என்ற சமண அறிஞர் இங்கு வாழ்ந்துள்ளார்
. மாணவ , மாணவியர் இங்கு தங்கியிருந்து கல்வி கற்றுள்ளனர் . சமணச் சமயப்பணியும் , இலக்கியப்
பணியுடன் கல்விப் பணியும் செஞ்சிருக்காங்க.. பெண்கள் கல்வியை சமணசமயம் தங்களுடைய கல்வி
நிறுவனம் மூலம் வளர்த்துள்ளாங்க.இந்த செய்தியை அங்கே உள்ள கல்வெட்டுக்கள் சொல்லுதுங்க.
. இங்குள்ள தீர்த்தங்கரர்களின் சிற்பங்களுக்கு விளக்கெரிக்க மான்யம் வழங்கப்பெற்ற கல்வெட்டுச்
செய்தியும் உள்ளது . இவையனைத்தும் பாண்டியன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த
பெருமைக்குரியச் சின்னங்களாகும் . மலைமேல் நின்று கீழே பார்க்கும்போது வயல்வெளிகள்
, வானத்தின் அழகு , குளத்தின் வனப்பு உள்ளத்தைக் குளிர வைக்கும் .
குடைவரை
முருகன் கோயில்
மலையடிவாரத்தில்
மலையைக்குடைந்து இந்தக் கோயில் செய்திருக்காங்க. கருவறையில் கழுகாசலமூர்த்தியாக முருகப்பெருமான்
ஒரு முகமும் , ஆறு கரங்களுடன் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் காட்சி. திருச்செந்தூரில்
முருகனுடைய வடிவத்தில் ஒருமுகம் நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியர் உள்ளார் . ஆறுமுகம்
பன்னிரண்டு கரங்களுடன் சண்முகர் உள்ளார் . ஆனால் கழுகுமலையில் முருகப்பெருமான் ஒருமுகத்துடன்
ஆறுகரங்களுடன் வித்தியாசமாக உள்ளார் . ஆணவம்
அடைந்த பிரம்மனைச் சிறையிட்டு பிரம்மாவின் படைத்தல் தொழிலைச் செய்தவர் முருகனாதலால்
பிரம்மாவிற்குரிய ஆறு கரங்களையும் கொண்டுள்ளார்.. இப்பெருமான் மீது அருணாகிரிநாதர்
, காவடிசிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் , மகாகவி பாரதியார் ஆகியோர் பாடியுள்ளார்
.
இக்கோயிலின் அருகில்
அழகிய தெப்பக்குளம் உள்ளது .
சுற்றுலா வரும் குழந்தைகளை மகிழ்விக்க சிறுவர்
பூங்கா , பெரியவருக்கான பூங்கா , அழகிய தாமரைக்குளம் ஆகியனவும் உள்ளன .
சிற்பக்கலையில் குடைவரைப் படைப்பிலே நம்ம கழுகுமலைக்கு உயர்வான இடமிருக்குது . வெளிநாட்டுக்காரங்க
பாத்திட்டுப் பாராட்டிடுப் போகின்ற கழுகுமலைக்கு குடும்பத்துடன் செல்வோம் . கலைப் படைப்புகளைக்
கண்டு சந்தோசப்படுவோம்.நம்ம பகுதியிலே இப்படி ஒரு சிறப்பான இடம் இருந்து அதை பாக்காம
இருக்கலாமா……..போவோமுங்க.
Comments
Post a Comment