உடுமலை அருகே தளிஞ்சியில் புதிய கல்வெட்டுகளும் பெருங்கற்படை ஈமச் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உடுமலை மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியைக் கடந்து, சம்பக்காட்டில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு நடந்து சென்றால் வரும் மலைவாழ் கிராமம் தளிஞ்சி. பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த ஊரில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம், தொல்லியல் ஆர்வலர் ஜான்சன் கொடுத்த தகவலின்படி தளிஞ்சியில் ஆய்வு செய்தார். அவர் தெரிவித்த தகவல்கள்:
தளிஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களின் நடுவில் ஓரிடத்தில் கல் சிற்பங்கள் சிதறிக் கிடந்தன. அருகே இரண்டு துண்டாக உடைந்த கல்வெட்டு வரிகளுடன் கூடிய பலகைப் பாறைக்கல் இருந்தது. 2 நந்தி சிலைகளும், ஒரு பெண் தெய்வச் சிற்பமும், ஒரு நாகர் சிற்பமும், நந்தியின் தலைப்பகுதிச் சிற்பமும் குவியலாகக் கிடந்தது. பெண் தெய்வச் சிற்பம் மூன்றாக உடைந்து கிடந்தது. பீடத்தோடு கூடிய பாதப்பகுதி, தலை மற்றும் உடல் பகுதி கிடந்தது. நந்தி சிலை கிடந்ததால் இங்கு சிவன் கோவில் இருந்திருக்க வாய்ப்புண்டு.
இக்கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், தென்கொங்கு பகுதியை ஆட்சி செய்த வீரகேரள அரசனான வீரநாராயணன் அதிசய சோழன் காலத்துடையது என்பது தெரிய வந்தது.
பழங்காலத்தில் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளாக இருந்தது. இவர்கள் சுயாட்சி பெற்று சோழர்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாக ஆண்டனர். இடைக்காலச் சேரர்களைத் தொடர்ந்து ஆட்சி செய்த கேரள மரபினர் என்ற கருத்தும் உண்டு.
தென்கொங்கு பகுதியில் வீரகேரளர்கள் கி.பி. 945 முதல் கி.பி.1200-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்துள்ளனர். வீரகேரள அரசர்களில் முதன்மையான அரசன் வீரகேரளன் வீரநாராயணன். இவரது மகனே தளிஞ்சி கல்வெட்டில் குறிப்பிடப்படும் வீரநாராயணன் அதிசய சோழன். இவர் கி.பி. 990-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1021-ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இதிலிருந்து இக்கல்வெட்டின் காலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது. ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளிலும் வீரகேரள அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில், நெல் கொடையாக வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இங்கு குழலூதும் சிலை, திருமால் சிலை ஆகியவை கிடைத்துள்ளன. கிருஷ்ணன் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி சில சிற்பங்கள் அடங்கிய பலகைக் கற்கள் உள்ளன. இறந்துபோன வீரர்களின் மனைவியர் தங்கள் உயிரைத் தீயிட்டு மாய்த்துக் கொண்டதைக் குறிக்கும் நினைவுக் கற்கள் இவை. மற்றொரு சிற்பம், வீரர் ஒருவருக்காக எடுக்கப்பட்ட நடுகல். இங்குள்ள கொண்டம்மா கோயில் அருகில் பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னம் காணப்பட்டது. இக்காலத்தைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைத்து, அந்த இடத்தில் நினைவுச் சின்னங்கள் அமைத்து முன்னோர்களை வழிபட்டனர்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தளிஞ்சியில் மக்கள் நாகரிக வாழ்க்கை வாழ்ந்துள்ளது இக்கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.
இப்பகுதியில் தொல்லியல் துறையினர் மேலும் ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் தெரியவரும். நன்றி-பழங்காலத் தமிழர் வரலாறு
Comments
Post a Comment