சாத்தான்குளம் அருகே கொம்பன்குளத்தில் ஸ்ரீ கோதா சமேதா ராஜகோபாலசுவாமி கோயிலில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்பன்குளத்தில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கல்வெட்டுக்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஆறுமுகநேரி முனைவர் த.த.தவசிமுத்து தெரிவித்ததாவது,
சாத்தான்குளத்திலிருந்துசுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் கொம்பன்குளம் என்ற சிற்றூர் உள்ளது.இங்கு ஸ்ரீ கோதாசமேதா ராஜகோபாலசுவாமி திருக்கோயில் சிற்பக்கலை நயத்துடன் அமைந்துள்ளது.பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்று, விஜயநகர காலத்தில் மண்டபங்களும் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் பெரும்பகுதி வெள்ளைக்கற்களால் அமையப்பெற்றது.
மூலவராக ஸ்ரீராஜகோபாலசுவாமி நின்ற திருக்கோலம்.கிழக்கே திருமுக மண்டலம்.வலப்புறம் ஸ்ரீகோதாநாச்சியார் இடப்புறம் பெரிய திருவடியான கருடாழ்வார் கை கூப்பி சுவாமியைக் கும்பிட்டவாறு உள்ளார்.இக்கோயிலின் மற்றொரு சிறப்பு சக்கரத்தாழ்வார் தனிசன்னிதியில் அருள் பாலிப்பது. திருமாலின் ஆயுதங்கள் ஐந்து.ஐம்படைகளெனப்படும்.அவை சங்கு, சக்கரம், கதை,வில்,மற்றும் வாள் ஆகியனவாகும்.சங்கு பாஜ்சசைன்னியம் என்றும் சக்கரம் சுதர்சனம் என்றும் கதை கெளமேதகி என்றும் வில் சாரங்கம் என்றும் வாள் நர்த்தகம் என்றும் அழைக்கப்படுகின்றன.திருமாலின் வலது கரத்தில் உள்ள சக்கரத்தில் உறைபவர் சுதர்சனர்.இந்த சுதர்சனர் பஞ்சாயுதங்களின் தலைவனாவார்.எதிரிகளை வெற்றி கொள்வதற்கும், செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடையவும் சுதர்சன ஹோமங்கள் செய்யப்படுகின்றன.இவரே சக்கத்தாழ்வார், சக்கரராஜா, சக்கரபாணி, சுதர்சனமூர்த்தி,ஹேதிராஜன்,சுதர்சனராஜன் என்றும் அழைக்கப்படுவார். அவருக்கான தனி சன்னிதி போன்ற அமைப்பு கருவறைக்கு வெளியே வடபுறம் பந்தல்மண்டப அமைப்பில் உள்ளது.கிழக்கே பார்த்த நுழைவு வாயில்,வாயிலின் முன்புறம் கேரளபாணீயில் ஓடு வேயப்பட்ட பந்தல் அமைப்பு.வாசல் வழியாக உள்ளே நுழையும் முன்பாக பலிபீடம்,உள்ளே சென்றால் விழாக்கள்,சுவாமியின் திருக்கல்யாணம் நிகழ்த்தப் பெற்ற வசந்தமண்டபம் நெடிதுயர்ந்த தூண்களுடன் உள்ளன.மண்டபத்தின் மேற்புரம் கூடுகளுக்குப்பதிலாக சிறிய குரங்கின் சிற்பம்.தொடர்ச்சியாக முகமண்டபம்.இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் இராமன்,சீதாதேவி, இலட்சுமணன்,அனுமன்,சுக்கிரீவன்,அரசன் ஆகியோரது சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அனைத்தும் வெள்ளைக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளதால் அதனுடைய பல பகுதிகள் தேய்ந்தும் உடைந்தும் போயுள்ளன.தொடர்ந்து சென்றால் மகாமண்டபத்தினுள் நுழையலாம். தொடர்ந்து அர்த்தமண்டபமும் கருவறையும் உள்ளது. அர்த்தமண்டபம் கருவறையைச் சுற்றி வர வேண்டுமென்றால் வெயில்,மழை படாமல் உள்ளேயேச் சுற்றி வரலாம்.இத்தகைய மூடியத் திருச்சுற்று பிரசட்சண பாதமாக அமைந்துள்ளது.இவ்வகை சாந்தார வகைக் கோயிலாகும். கருவறை வாசல் சுவரோடு அரைத்தூணும் வெட்டுப் போதிகையுடன் அதிட்டானம் எளிய முறையில் அமைந்துள்ளது.மேலும் சுவரில் கோட்டப் பஞ்சரமும் அதில் இறையுரு வைப்பதற்கான எவ்வித பள்ளமோ இல்லை. தூண்களில் உள்ள போதிகைகள் பிற்கால பாண்டியர்கால வெட்டுப் போதிகையுடனும்,விஜயநகரக் கால பூமுனைப் போதிகையுடனும் உள்ளன. கருவறை மீதுள்ள விமானம் ஏகதள விமானம்.சிகரம் வட்டமாக இருக்கும் வேசர அமைப்பு. கிரீவத்தின் நான்கு மூலைகளிலும் கருடாழ்வாரும்,கிரீவக் கோட்டத்தில் தெய்வத்தின் உருவங்களும் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வடகிழக்குப்பகுதியில் தலவிருட்சமாக ஆலும் வேம்பும் இணைந்து உள்ளன.தீர்த்தக்கிணறும் அதனருகில் உள்ளது மரத்தினடியில் விநாயகர் சிலையும், சிறிய நாகர்கள் சிலைகளும் காணப்படுகின்றன.மிகப்பழமையான பீங்கானிலான தாழி ஒன்றும் இங்கு காணப்படுகின்றது.
கருவறையைச் சுற்றி உள்ளே வரும்போது தற்காலக் கல்வெட்டு ஆறு வரிகளில் இந்த நூற்றாண்டு எழுத்தமைதியுடன் காணப்படுகிறது. இக்கோயிலுக்கான வழிபாடு கட்டளை மேற்கொள்வது குறித்தும் ‘’தனைக்கன்குளம்’’ என்ற கோயிலுக்கான கிராமநிலம் குறித்த செய்தியும் அதில் உள்ளது.
இயற்கை வளமிக்க கொம்பன்குளம் என்ற ஊரின் மத்தியில்தான் முற்காலத்தில் இக்கோயில் அமைந்திருந்தது. கோயிலைச் சுற்றிலும் வழிபடும் மக்களின் குடியிருப்புக்கள் ,கோயிலைச் சார்ந்தோரின் குடியிருப்புக்களும் அமைந்திருந்தன.தினமும் பாசுரங்களும், வேதங்களும், ,யாகங்களும் நிகழ்த்தப்பெற்றன.கால வெள்ளத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்,படையெடுப்பு போன்ற மனிதச் சீற்றங்கள், பெருமழை, மழை பெய்யாமை போன்ற இயற்கைச் சீற்றங்களினால் இவ்வூர் வளமிக்க வீதிகளையும், விழாக்களையும் இழந்துள்ளன.
கி.பி 17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த விஜயநகரக் காலத்திலான குறடு பந்தல் மண்டபம்,கோயிலுக்கு வெளியே முன்புறம் எழில்மிகு சிற்ப நயத்துடன் நுட்பமான கட்டடக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது. கம்புப்பகுதி வட்டம்,சதுரம்,பதினாறுப்பட்டை என பதினாறு தூண்களுடன் செவ்வக வடிவிலான,மத்தியில் திருவிழாக் காலங்களில் சுவாமி எழுந்தருளுவதற்கான குறடு உள்ளது. தரையைச் சுற்றிலும் நீர் செல்வதற்கான ஓடை அமைப்பு உள்ளது.குறடின் மேற்புற படிக்கட்டின் இரு ஓரத்தில் யானையின் தலையின் அமைப்பு தும்பிக்கையின் நீட்டிய அமைப்பும் காணப்படுகின்றது. வடபுறம் தும்பிக்கை ஒரு சிறுவனைத் தூக்கி வைத்திருப்பது போன்ற சிறிய சிற்ப நுட்பம் தமிழனின் கலைக்கோர் சான்று.இக்குறட்டின் தூணின் மாலசுதானம் பகுதியில் இம்மண்டபத்திக் கட்டிய வீரமுடி அய்யன் என்ற அரசன் எளிய அடியவர் போல கழுத்தில் உத்திராட்சம் அணிந்துள்ளார்,வேறு எவ்வித அணிகலனும் பூநூலும் அணியவில்லை. அரசர்கள் அணிவது போல இடுப்பில் ஆடையை அழகிய மடிப்புடன் அணிந்து ராஜகோபாலசுவாமியை நோக்கிக் கும்பிட்ட கரத்துடன் முழு உருவச்சிற்பமும் அதன் தலைக்கு மேலே ’’வீரமுடி அய்யன் சதா சேவை ’’ என்ற கல்வெட்டுப் பொறிப்பும் உள்ளது மேலும் தூணுக்குக்கீழே கொல்லம் என்று தொடங்கும் கல்வெட்டு அம்மண்டம் எழுப்பப்பட்ட காலத்தைக் குறிக்கின்றது.இது வெள்ளைக் கல்லால் அமைக்கப்பட்டதனால் எழுத்து தேய்ந்து போயுள்ளது. விஜயநகர காலத்தில் கி.பி.17 ஆம் நூற்றாண்டில்தான் பெருமாள் கோயில்களில் குறடினைக் கட்டுவித்து,அதன் தூண்களில் தங்களுடைய சிற்பங்களை அமைத்துக் கொண்டனர்.தற்காலத்தில் மிகவும் வறண்ட பகுதியாக,வானம் பார்த்தப் பூமியாகக் காணப்படும் கொம்பன்குளம் முற்காலத்தில் வளமிக்கப் பகுதியாக இருந்ததை எழில்மிக்க இக்கோயிலின் மூலம் காணலாம்.இலக்கியங்கள் போன்று கோயில்களும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன.
- Get link
- X
- Other Apps
Labels
கல்வெட்டுக்கள்
Labels:
கல்வெட்டுக்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment