சாத்தான்குளம் அருகே திருச்செந்தூர் சாலையில் பன்னம்பாறை என்ற கிராமம் உள்ளது.சமீபத்தில் இவ்வூரின் வடக்குப் பகுதியிலுள்ள பல்லாங்குழி ஓடைப்பாறையில் சங்ககாலத்திற்கு முற்பட்ட பல்லாங்குழி, மற்றும் பெருவழிப் பாதையைச் சுட்டிக்காட்டும் குழிகளும் கண்டறியப்பட்டன. தற்போது இங்குள்ள ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பன்னம்பாறையின் வடக்குப்பகுதியில் உள்ள ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலின் படிக்கட்டு ஒன்றில் எழுத்துக்கள் இருப்பது கண்ட கோயிலின் பரம்பரை பூசாரி எஸ்.பரமசிவம் , தமிழக அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பயிற்சி பெற்றவரான முனைவர் த.த.தவசிமுத்து அவர்களிடம் கூறினார்..
இது பற்றி முனைவர் த.த.தவசிமுத்து கூறியதாவது,கோயிலின் படிக்கட்டாக இருந்த கல்வெட்டு ,முக்கால் அடி அகலமும் மூன்றே கால் அடி உயரமும் கொண்ட வெள்ளைக்கல்லிலான அப்பலகைக் கல்லில் ஐந்து வரிகளில் எழுத்து சிதைந்து காணப்பட்டது.இப்பலகைக் கல்லானது கல்வெட்டின் பின்தொடர்ச்சிப் பகுதி. முன்பகுதி கிடைத்தால் செய்தியை அறிந்து கொள்ள முடியும் என்ற போது,பூசாரி தாங்கள் தற்போது கோயிலின் கன்னி மூலையில் விநாயகராக வைத்து வழிப்படும் நடுகல் ஒன்றைக் காட்டினார்.பூமியில் நட்டி வைக்கப்பட்டிருந்த அப்பலகைக் கல்லைத் தோண்டிப்பார்த்தபோது அது முதலில் கண்ட பலகைக்கல்லின் உடைந்த முன் பகுதி என கண்டறியப்பட்டது.இரண்டையும் சேர்த்தபோது ஐந்தரை அடி நீளத்துடன் பத்து வரிகளுடன் கல்வெட்டு காணப்பட்டது. அதன் தலைப்பகுதியில் எண்ணெய் பூச்சினால் ஒரு அங்குலம் படிமம் ஏறியிருந்தது. அதனை சுத்தம் செய்த பின்பு அதில் விநாயகரின் வாகனமான எலியின் புடைச்சிற்பம் முன்னங்காலை படிக்கட்டு ஒன்றில் தூக்கி வைத்திருப்பது போலவும், அதன் வாலின் அருகில் குத்து வாளும்,மேலே விநாயகரின் அங்குசமும், வலதுபுறம் சிதைந்த நிலையில் கோட்டுருவத்தில் பிறைச்சந்திரன், இடது புறம் சூரியனும் உள்ளது இச்சின்னம் இரண்டரை அடி உயரத்திலும், அதன் கீழே பத்து வரிகளில் ’’சுவாமி சிதம்பர விநாயகர் கட்டளைக்கு ………. உம்பளம்’’ என்ற எழுத்துக்கள் உள்ளன. உம்பளம் என்றால் மன்னரால் மானியமாக வழங்கப்படது என்பதாகும்.பிற நில அளவைகள் குறிப்புக்கள் சிதைவடைந்து உள்ளன.இருப்பினும் இக்கல்வெட்டானது சிதம்பர விநாயகர் கோயில் வழிபாடு தடையற நடைபெறுவதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத்தில் அரசு அதிகாரம் பெற்ற அலுவலரின் ஒப்புதலோடு வரி நீக்கி நிலம் மானியமாக வழங்கப்பட்டு, அந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்த எல்கைக் கல்லாகும்.
பழங்காலத்தில் கோயில்களின் வழிபாட்டிற்காக அரசர்கள் நிலத்தை வரி நீக்கி தானமாக வழங்குவர் சிவன் கோயிலுக்குரிய நிலம் தேவதானம் எனப்படும். நட்டுவிக்கப்படும் கல்லில் திரி சூலம் பொறிக்கப்பட்டு நிலம் பற்றிய செய்தியும் எழுதப்பட்டு இருக்கும் அது சூலக்கல் எனப்படும்.புத்த.ஜைன பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிலம் பள்ளிச்சந்தம் எனப்படும்.
பெருமாள் கோயிலுக்குரிய நிலம் திருவிடையாட்டம் எனப்படும் சக்கரம் பொறிக்கப்பட்ட கல் எல்கையில் நடப்பட்டு ஆழிக்கல் என்று அழைக்கப்படும்..
தற்போது பன்னம்பாறையில் கிடைத்துள்ள இக்கல்லில் விநாயகரின் கையிலிருக்கும் அங்குசம்,மற்றும் எலியின் சின்னத்துடன் ,நிலம் பற்றிய செய்தியும் பொறிக்கப்பட்டு உள்ளதால் இதனை அங்குசக்கல் என்றழைக்கலாம் என்றும், இக்கல்வெட்டு குறித்த மேலாய்வு நடைபெற்று வருகின்றது என்றும் கூறினார்.
.இக்கல்வெட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கிணற்றில் தூர் வாறும் போது உடைந்த நிலையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. கல்வெட்டு கிடைத்த ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலுக்கு அருகே சிதம்பர விநாயகர் கோயிலும்,குளமும் உள்ளது.
- Get link
- X
- Other Apps
Labels
கல்வெட்டுக்கள்
Labels:
கல்வெட்டுக்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment