அகத்தியர் ஞானம்
பஞ்சமாபாதகங்களை விட்டுவிட்டு அளவோடு உண்டு அளவோடு உறங்குவது மட்டுமே ஞான மார்க்கத்தை விரும்பும் சீடரின் தகுதிகளாகும்.
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்,
தெய்வ நிலை ஒருவருமே காணார்;காணார்;
ஆரப்பா நிலை நிற்கப் போறார்? ஐயோ!
ஆச்சரியம் கோடியில் ஒருவன் தானே!
-அகத்தியர் ஞானம்(1:3)
ஞானம் அடைவது அரிதினும் அரிது என்பதோடு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஞான வேட்கை ஏற்பட்டு ஞானம் கிட்டும் என்பார் அகத்தியர்.
அத்துடன் அகத்தியர் கூறும் ஞானம் அடைபவரின் மற்ற தகுதிகள் பற்றிய விடயங்களைப் பார்ப்போம்.
செப்புவேன் துலாத்தோர்க்கு தேவி முதல் சித்தி;
சிவனோடு மந்திரங்கள் எல்லாம் சித்தி;
ஒப்புவேன் வாத சித்தி குளிகை சித்தி
உயர்ந்து நின்ற காயசித்தி உறுதியாகுந்
தப்புவேன் என்றாலுந் தவறிடாது
சாதகமாய் வாசியது தானே தூக்கும்.
கொப்புவேன் உலகத்தில் தசதீட்சை பெற்ற
கொடிய சிவயோகி எனக் கூறுவோரே,
-அகஸ்தியர் மஹாதிராவகம் 2-
துலாம் ராசியையோ,லக்கினத்தையோ ஜாதகத்தில் அமையப் பெற்றவர்களுக்கு,பார்வதி தேவியின்(உலக நாயகியின்) அருள் பூரணமாகக் கிட்டும். சிவன் அருள் கிடைப்பதோடு, மந்திரப் பிரயோகங்கள் எல்லாம் சித்தியடையும். வாசியானது, வாசியோகம் போன்றவை செய்யாமலேயே தூக்கும்(அதாவது ஞானம் சித்திக்கும்) உலகத்தில் தச தீட்சை பெற்ற கொடிய சிவயோகியாக இவர்கள் திகழ்வார்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.
கூறியதோர் கன்னியுமே மீனத்தோன்தான்
கொள்கியவன் வணிகனைப் போல் கூர்ந்து செய்வான்
ஆறியதோர் மனம் பார்த்து பின்பு கொள்வான்
ஆசை கொண்டு வெகுமனதாய் ஆலோசிப்பான்
தேறியதோர் வாசியிலே மூழ்கி நிற்பான்
தேவியது பூசையிலே திறமோ கொஞ்சம்
மாறியதோர் மனம் பிடித்தால் வாத சித்தாம்
மயக்கமற்றால் காய சித்தி வருகுந்தானே!
-அகஸ்தியர் மஹாதிராவகம் 3-
கன்னி மற்றும் மீன ராசி மற்றும் லக்கினகாரர்கள் வணிகனைப்(முருகன் என்றும் சொல்லலாம்) போல கூர்மையாக பல காரியங்களை செய்வார்கள். மனம் கொதிப்போடு அலைபாயும் மனத்தோடு இருப்பவர்களை விலக்கி, ஆறிய, அடங்கிய மனம் கொண்டவர்களைத் தேடிப் போய்க் குருவாய்க் கொள்வார்கள்.
ஞானத்தின் மீது ஆசை கொண்டு வெகு மனதாய் ஆலோசித்து சிந்தையை ஒடுக்குவார்கள். தேறிய வாசி யோகத்தில் நிலைத்து மூழ்கி நிற்பார்கள்
உலக நாயகியான பார்வதி தேவி பூசையில் சிறிது திறம் காட்டுவார்கள். மாறிக் கொண்டே இருக்கும் மனத்தை மாறாமல் இறுக்கிப் பிடித்தால் ரச வாதம் போன்ற சித்துக்கள் கைவரும்.
உலக மயக்கம் அற்றால் காய சித்தி (உடல் அழியாமல் இருக்கும்.{எடுத்துக் காட்டாக, திருவரங்கக் கோயிலில் இருக்கும் ராமானுஜ உடையவர் சன்னதியில் இருக்கும் ஸ்தூல உடல், திருவாரூர் மடப்புரத்தில் இருக்கும் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஸ்தூல உடல்})
தானென்ற மேஷமுமே தனுசோன் கேளு
சாதகமாய்க் கொண்டேறித் தாயைப் போற்றி
வானென்ற சமாதியிலே நின்று தேறி
வாதசித்தும் வாசிசித்தும் வரவே செய்வான்
கோனென்ற குருபதத்தை அடுத்துக் காப்பான்
குறையாமல் சாஸ்திரத்தை விளங்குவானே!
வேனென்ற மாய்கையிலே மனது கொள்ளான்
வேதாந்த சாஸ்திரத்தை விளங்குவானே.
-அகஸ்தியர் மஹாதிராவகம் 4-
மேஷம் மற்றும் தனுசு ராசி மற்றும் லக்கினகாரர்கள், சாதகமாய் யோகசாதன முறைகளினால் உலக நாயகியான பார்வதி தேவியைப் போற்றி,ஆகாயக் கூறை வளப்படுத்தும் சமாதியில் நின்று அதில் தேர்ச்சி அடைவார்கள்.
விளங்கி நின்ற மற்றேழு மிராசியோர்கள்
வெறும் பேச்சாய்த் திரிவார்கள் சித்தியில்லை
புளங்கிநின்ற பூசைக்கு வருவோமென்பார்
புகுந்தாலும் மாயசித்தே புணர்ச்சி செய்வார்
தளங்கி நின்ற வாதத்தை சுட்டுமாய்வார்
சாஸ்திரமுங் குருதேடார் தான்தானென்பார்
அளங்கிநின்றும் மலைவார்கள் அறிந்துகொள்ளு
அவரேழுமிரா சியோர்அறைந் திட்டேனே.
-அகஸ்தியர் மஹாதிராவகம் 5-
விளங்கிநின்ற மற்றேழு இராசியோர்களின் ( ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், ) கிரக அமைப்புகள் ஞான மார்க்கத்துக்கு சாதகமாய் அமைந்தவையல்ல. இந்த ஏழு இராசியோர்களுக்கு தான் என்ற அகங்காரம் முனைப்புடன் வந்து வழி கெடுக்கும் என்கிறார் அகத்தியர்.
எந்த ராசியில் பிறந்தவர் ஆனாலும் முறைப்படி தவம் செய்யாத ஒருவரை முத்தியடையச் செய்ய இறைவனாலும் இயலாது.எனவே எந்த இராசியானாலும் தவ முயற்சியானது உழைப்புக்கேற்ற பலன் தரும் என்பது சித்தர்களின் வாக்கு. பெரு மதிப்பிற்குரிய விசுவாமித்திரருக்கு அவர் அகங்காரத்தினால் தனது சக்தியை செலவிட்டு பலமுறை சக்தியை இழந்தாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ஞானம் அடைந்தார்.
ம்.ஓகே
ReplyDelete