திருவரங்கம் பெரியகோயிலில் பெருமாள் தேவன் மண்டபம் எங்கே உள்ளது?
18ஆம்படி ஸேவை எங்கு, எப்போது நடைபெற்றது?
1) அகளங்கன் திருச்சுற்று என்று அழைக்கப்படும் 5ஆவது திருச்சுற்றின் வட கிழக்கு மூலையில் அமைந்துள்ளது ஆயிரங்கால் மண்டபம்.
இதுவே பெருமாள்தேவன் மண்டபம் என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்படுகிறது. திருக்கோயிலினுள்ளே மிக நீண்ட அகலமும் நீளமும் கொண்ட மண்டபம் இது ஒன்றுதான். இதன் நீளம் 503 அடி. அகலம் 138அடி. இதில் ஒரு வரிசைக்கு 54 தூண்கள் 16 வரிசைகள் காணப்படுகின்றன.
கண்ணுக்கு இலக்காகும் தூண்கள் 864. வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சுவற்றில் பொதிந்துள்ள தூண்கள் 64. இந்த மண்டபத்தின் அமைப்பைக் கூர்ந்து நோக்கினால் அது மூன்றடுக்களில் அமைந்துள்ளதைக் காணலாம். ஆயினும் Fergusson
என்ற வரலாற்று ஆசிரியர் 953 தூண்கள் உள்ளனவாகக் குறிப்பிட்டுள்ளார்.
2) ஒவ்வொரு அமைப்பிலும் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அவற்றிலும் தூண்கள் அமைந்துள்ளன.அவை முறையே, வடக்கிலிருந்து சங்கராந்தி மண்டபம், திருமாமணி மண்டபம், கனு மண்டபம் எனப் பெயரிடப்பட்டுள்ளன. தெற்குப் பகுதியில் ஒரு தூணின் உயரம் 19 அடி. மண்டபத்தின் மேலே செல்லச் செல்ல தூணின் உயரம் குறைந்து கொண்டே போகும்.
3) சங்கராந்தி மண்டபத்தளம் கனுமண்டபத்திலிருந்து 8 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திலுள்ள தூண்கள் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவையல்ல. சோழ, பாண்டிய, ஹொய்சாள, விஜயநகர மன்னர்கள் காலத்தைய கட்டிட அமைப்பைக் கொண்டவை இந்தத் தூண்களும் மண்டபங்களும் ஆகும்.
4) சோழ மன்னனான மூன்றாம் ராஜராஜனை கி.பி. 1231ஆம் ஆண்டு சிறையிலிருந்து மீட்டு அவனை அரியணையில் அமர்த்தினான் வீர நரசிம்மன் என்று அழைக்கப்படும் ஹொய்சாள மன்னனான இரண்டாம் நரசிம்மன் (1220-1235). தற்போது சமயபுரம் என்று அழைக்கப்படும் கண்ணனூரைத் தலைநகராகக் கொண்டு இவர்கள் திருவரங்கப் பகுதியை ஆட்சி செய்து வந்தனர். இவனுக்குப் பிறகு இவனுடைய மகன் வீரசோமேச்வரன் (1233-67) அதன்பிறகு அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவனான வீர ராமநாதன் (1254-95) ஆகியோர் இந்தப் பகுதியை ஆண்டு வந்தனர்.
5) வீர ராமநாதனின் முதல்மந்திரியாக விளங்கியவர் கம்பைய தண்டநாயக்கர். இவர் ஆலிநாடன் திருச்சுற்றின்(4ஆம் திருச்சுற்று) வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள பரமபதநாதன் ஸந்நிதி, சக்ரத்தாழ்வார் ஸந்நிதி, ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதி முன்மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றைப் புதுப்பித்தும், மண்டபங்கள் பலவற்றைப் புதிதாக நிர்மாணித்தும் கைங்கர்யங்கள் பலவற்றை மேற்கொண்டார்.
6) அவற்றில் கம்பைய தண்டநாயக்கரின் உதவியாளரான பெருமாள் தேவன் என்பார் ஆயிரங்கால் மண்டபத்தை விரிவு படுத்தினார்.
இந்தப் பெருமாள்தேவன் பரம ஸ்ரீவைஷ்ணவன்.
இவனைப் பெருமாள் தேவனாகிய ஆழ்வான் என்று கர்னாடக மாநிலத்துக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
வீரராமநாதனுக்கும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கும் நடந்த கடும்போரில் வீரராமநாதனும், கம்பைய தண்ட நாயக்கரும் கொல்லப்பட்டனர். ஹொய்சாள மன்னர்களின் ஆதிக்கமும் தமிழகத்தின் தென்பகுதியில் முடிவுக்கு வந்தது. பிறகு பாண்டியர்கள் நாட்டை ஆண்டு வந்தனர்.
7) முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1250-1284) திருவரங்கம் கோயில் விமானத்திற்குப் பொன் வேய்ந்ததோடு மட்டுமில்லாமல் 23 இடங்களில் துலாபாரம் ஸமர்ப்பித்தான். அந்தத் துலாபார மண்டபங்களே ஆலிநாடன் மற்றும்அகளங்கன் திருச்சுற்றுக்களில் அமைந்துள்ள மிகுதியான நாலு கால் மண்டபங்களாகும். இவன் ஹொய்சாள படைத்தலைவனான பெருமாள் தேவனை துவார சமுத்திரத்திற்குத் துரத்தி அடித்தபோதிலும் அந்த மண்டபத்தைச் செம்மை செய்து அதற்குப் “பெருமாள்தேவன் மண்டபம்” என்று பெயர் சூட்டினான். இது சுந்தரபாண்டியனது பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது.
8) ஆயிரங்கால் மண்டபத்தின் வடக்குப் பகுதியில் சங்கராந்தி மண்டபத்திற்கு பின் அர்ச்சா விக்ரஹங்கள் எழுந்தருளி யிராத ஸந்நிதி ஒன்றினை நாம் காணலாம்.
9) விருப்பண்ண உடையார் காலத்தில் அவருடைய பிரதானியான சவுண்டப்பர் என்பார் ஆயிரங்கால் மண்டபத்தை கி.பி. 1390 ஆம் ஆண்டு புனர்நிர்மாணம் செய்து, அங்கு விட்டலநாதர் ஸந்நிதியை ஏற்படுத்தி வைத்ததாக ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டு எண் AR No. 197/1951-52 குறிப்பிடுகிறது. பிற்காலங்களில் ஏற்பட்ட ஏதோ ஒரு ஆபத்தில் இந்த ஸந்நிதி பாழ்பட்டிருக்கக்கூடும்.
10) விட்டலதேவர் ஸந்நிதிக்கு பின்புறம் ஆயிரங்கால் மண்டபத்தின் மேல் தளத்திற்குச் செல்வதற்கான 18 அகலமான படிகள் அமைந்துள்ளதைக் காணலாம்.
11) கோடைத்திருநாளின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் மேல்தளத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பத்தியுலாத்தியதாகவும், அரையர்கள் கீழை உத்தரவீதியில் (செந்தமிழ்பாடுவார் வீதி) இருந்து பெருமாள்திருமொழியை ஸேவித்து வந்ததாகவும் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிள்ளைலோகம் ஜீயர் குறிப்பிடுகிறார். மூன்றாம் ஹரிஹர ராயனின் கி.பி. 1414ஆம் ஆண்டு செப்பேட்டில் 18ஆம்படி உத்ஸவம் என்று இது குறிப்பிடப்படுகிறது.
12) நம்பெருமாள் 18படிகளைக் கடந்தவுடன் மாலை சாற்றும் உரிமையை 18ஆம் படி ஸேவைக்காரர் என்ற ஸ்ரீவைஷ்ணவர் பெற்றிருந்தார். அவருக்கென அமைந்த திருமாளிகையும் 18படிகள் கொண்டதாக மேலைச்சித்திரை வீதியில் அளிக்கப்பட்டது. மேலைச்சித்திரைவீதியின் வடக்குப் பகுதியில் மேற்கு நோக்கி அமைந்துள்ள அந்தத் திருமாளிகையை இன்றும் நாம் காணலாம்.
13) சங்கராந்தி தினத்தன்று தாயார் ஸந்நிதியை நோக்கி நம்பெருமாள் உபயநாச்சிமார்களோடு ஆயிரங்கால் மண்டபத்தின் வடகோடியில் அமைந்துள்ள “யானைப்பூண்ட குறட்டில்” திருமஞ்சனம் கண்டருளியதாகக் கோயிலொழுகு குறிப்பிடுகிறது. பிற்காலங்களில் இந்தநிகழ்ச்சி மாற்றம் அடைந்து தெற்கு நோக்கிச் சங்கராந்தி மண்டபத்தில் திருமஞ்சனம் தற்போது நடைபெற்று வருகிறது. சங்கராந்தி அல்லது கனு அன்று சூரியக்கிரகணம் நிகழ்ந்தால் நம்பெருமாள் வடக்கு நோக்கித் திருமஞ்சனம் கண்டருளுவார்.
(கிரகணம் உத்தராயணத்தில் நிகழுவதால் நம்பெருமாள் வடக்கு நோக்கித் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.) ***
தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.
Comments
Post a Comment