காசி விஸ்வநாதர் ..
திருக்கோவில்...தென்காசி..!!
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில், தென்றல் வீசும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த தலத்தில் காலடி எடுத்து வைத்தவுடனே மூலிகை நறுமணம் நம்மை வரவேற்கும். இது கேரள நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வரும் நுழைவு வாயில். இந்த கோவில் ஆயிரம் வருட பாரம்பர்யம் கொண்டது. இதன் சிற்ப வேலைப்பாடுகள் அதிசயத்தக்க வகையில் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலத்தில் ஈஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி இருப்பது மிகவும் விசேஷம் என்கின்றனர். வடக்கே காசியிலுள்ள விஸ்வநாதரை தரிசித்த பலனும், சக்தியும் இங்குள்ள ஈஸ்வரனை தரிசித்தால் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் என்பது ஆகும். இந்த கோவில் சுமார் 700 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதை கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியப் படுகிறது.
இந்த இடத்தை முன்பு ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டிய மன்னன் தீர்த்த யாத்திரையாக வடக்கே உள்ள காசிக்கு புறப்படத் தயாரானார். அன்று இரவு அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, பக்தனே! என்னைக் காண பல நூறு கல் கடந்து பயணம் செய்வதற்கு பதிலாக இங்கேயே ஒரு கோவில் எழுப்பினால், நான் வந்து அருள் புரிகிறேன்.
என் சன்னிதானம் அமையும் இடத்தை உன் அரண் மனையின் வாசலில் உள்ள எறும்புக் கூட்டம் வழி காட்டும்” என்று கூறி மறைந்தார்.
சுயம்புவாக சுவாமி தோன்றினார்.
மன்னர் விழித்து எழுந்து அரண்மனை வாசலுக்கு சென்று பார்த்தபொழுது, முன்பு காணாத எறும்பு கூட்டம் சாரை, சாரையாக, சென்றது. அதைப் பின் தொடர்ந்து செல்கையில் சிற்றாறு நதிக்கரையில் செண்பக மரங்கள் அடர்ந்த காட்டில் ஒரு எறும்பு புற்று இருந்தது.
அத்துடன் எறும்பு கூட்டம் நின்றுவிட்டது. அந்த இடத்தில் சுவாமி, சுயம்புவாக தோன்றினார். அதை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து இந்த கோவிலை கட்டி முடித்தார்.
1967-ம் ஆண்டு வரை கோபுரம் இல்லாமல் இருந்தது. 1990ம் ஆண்டு 9 அடுக்குகளுடன், 180 அடி உயரத்தில் கலை வேலைப்பாடுகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, கம்பீரமாக தோற்றமளிக்கின்றது. கோபுரத்தின் 9 கோணங்களிலிருந்தும் வீதியை காணும் அமைப்பும், அகலமான வீதியும், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் சுவாமியைக் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
9வது அடுக்கில் ஒரு பால்கனி கட்டப்பட்டு அதிலிருந்து பார்த்தால் பச்சைப்பசேல் என்ற சுற்றுப்புறம் காண்பதற்கு ரம்மியமாய் உள்ளது. இக்கோவில் திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ளது. (மூன்று மலைகள் சேர்ந்து இருப்பதால் திரிகூடம் என்று அழைக்கப்படுகிறது). சுயம்புவான ஈசனார் லிங்க வடிவத்தில் கிழக்கு நோக்கிருக்கிறார். அருகில் பார்வதி தேவி உலகம்மனாக இருக்கிறார்.உடன் பாலசுப்ரமணியரும் உள்ளார்.
திருமணம் கைகூடும்,
புத்திரபாக்கியம் கிட்டும்
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவபக்தர்கள், தங்கள் குடும்பங்களின் நடக்கும் அனைத்து சுப காரியங் களுக்கும் இங்கு வந்து காசி விஸ்வநாதரை வணங்கி, ஆசி பெற்று செல்கின்றனர்.
அதனால் வாழ்க்கை வளம் பெறும், தொழில் வளம் உயரும், ஆரோக்கியம் பெருகும், வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு உகந்த வேலை கிட்டும், திருமணம் கை கூடும், புத்திரபாக்கியம் தருவார், இல்லற வாழ்க்கையில் நிம்மதி வந்து சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
இங்கு ஈஸ்வரனுக்கும், அன்னைக்கும் வஸ்திர வழிபாடு செய்து ஆராதிக்கின்றனர். மிகவும் அபூர்வமாக எல்லா தலங்களிலும், தெற்கு நோக்கி இருக்கும் துர்க்கா தேவி இங்கு மேற்கு நோக்கி இருக்கிறார். நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், இந்திரன், வாலி, நந்தி ஆகியோர் வழிபட்ட தலம் என்கின்றனர்.
மூன்று முக்கிய காரணங் களுக்காக இத்தலம் கீர்த்தி பெற்றது. பூர்வஜன்ம பாவங்கள் நீங்குதல், தோஷ நிவர்த்தி, புத்திர பாக்கியம் பெறுதல் ஆகியவைகள் ஆகும்.
தீர்த்த குளங்களாக, காசி தீர்த்தம், சித்திர குளம், அன்னபூரணி தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் ஆகிய 4 தீர்த்தங்கள் இருக்கின்றது. சிற்றாறு நீர், கங்கைக்கு ஒப்பான சக்தி வாய்ந்ததாகும்.
இந்த கோவிலின் தல விருஷம் செண்பக மரம். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை என்று கூறப்படுகின்றது. குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் ஆகியவைகளும் மிகவும் நேர்த்தியான மஹாவிஷ்ணு, கம்பீரமான காளி தேவி அனைத்தும் வியக்கத்தக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவைகள் ஆகும்.
மதுரை நகரைப் போன்று, இந்த கோவிலைச் சுற்றிலும் பல கோவில்கள் இருக்கின்றன. மேற்கு பிரகாரத்தில் மூலை விநாயகர் வெகு அழகாய் அமர்ந்து அருள் தருகிறார்.
பஞ்சலிங்க அய்யனார், மஹாலஷ்மி, சந்தன மாரீஸ்வரர், நடராஜ பெருமான், சண்டீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. அர்த்த மண்டபம், மணிமண்டபம், பஞ்ச பாண்டவர் மண்டபம், மஹா மண்டபம், இசை எழுப்பும் கல் தூண் மண்டபம் ஆகியவைகளும், பராக்கிரம பாண்டியன் சுவாமியை வணங்குவது போன்ற தத்ரூபமான சிலைகளும் காண்போரை வியக்க வைக்கும். இக்கோவில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரியதாக உள்ளது.
இந்த தலத்தில் மாசி மகம், நவராத்திரி, திருக்கல்யாணம், ஐப்பசி மாதத்திலும், தெப்பத்திருவிழா ஆவணி மாதம் மூல நட்சத்திரத்திலும், பத்ர திருவிழா தை அமாவாசை அன்றும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது..!!
Comments
Post a Comment