VAO கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்
- கிராமக் கணக்குகள் பராமரித்தல் பற்றி அரசானை எண். 581 – நாள் 3-04-1987-இன் படி பணிகள் அட்டவணை உருவாக்கப்பட்டது.
- இக்கணக்குகள் அனைத்தும் நிலம் சம்பந்தப்பட்டது ஆகும்.
- புல எண் (Survey Number):
- ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.
- நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன. 1. பதிவுத்துறை 2. வருவாய்த்துறை
- அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்.
1. பதிவுத்துறை:
- நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
2. வருவாய்த்துறை:
- இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
- பட்டா (Patta)
- சிட்டா (Chitta)
- அடங்கல் (Adangal)
- அ’ பதிவேடு (‘A’ Register)
- நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
- நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
- 1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
- 2. பட்டா எண்
- 3. உரிமையாளர் பெயர்
- 4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
- 5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
- 6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை
சிட்டா (Chitta) :
- ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
- அடங்கல் (Adangal) :
- ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.
அ’ பதிவேடு (‘A’ Register) :
- இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
- நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .
கிரயப் பத்திரம் (Sale Deed) :
- சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம் - சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும். கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.Land document
- 01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம். இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
- இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.
- நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.
- சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.
பதிவு செய்யும் முறை:
- நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
- நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.
- இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.
- பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.
- முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.
- சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.
- பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.
- பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.
- Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்
நிலையான ‘அ’ பதிவேடு:
- இப்பதிவேடு நில உட்பிரிவையும், அவற்றில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு ஆகும்.
- நிலவரி திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, பின்னர் பராமரிப்புக்காக ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திற்கும் தனித்தனியாக ‘அ’ பதிவேடு முதலில் கையால் எழுதப்பட்ட பிரதி வட்டாட்சியார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.பின்னர் அந்தப் பிரதி ஒன்று அச்சிடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் கெட்டி அட்டை போட்ட பதிவேடுகளாக வழங்கப்பட்டுள்ளது.
- இப்பதிவேட்டில் முதல் பகுதியாக வருவாய்க் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பு(Descrptive Memoir) வழங்கப்பட்டுள்ளது.
- இந்த வரலாற்றுக் குறிப்பில் முதல்பகுதியில் வருவாய்க் கிராமத்தின் வருவாய்க்குண்டான அனைத்து விவரங்களும் அடங்கும்.
நிலையான ‘அ’ பதிவேட்டின் விபரம்
- கிராமத்தின் பெயரும், உரிமை முறையும்.
- அமைவிடம்,
- பரப்பும் எல்லையும்.
- வெவ்வேறு வகைப்பாட்டின் பரப்பு.
- எல்லை வரையறுத்தல்.
- மக்கள்தொகை.
- நில உடைமைகள்.
- புன்செய் தொகுதிகள்.
- பாசன விவரங்கள்.
- குடி மரமாத்து.
- கிணறுகள்.
- வகைப்பாடும், வரிவிதிப்பும்.
- மீன்வளம்.
- பொதுக்குறிப்பு.
- ’அ’ பதிவேடு நடைமுறையில் கீழ்க்கண்ட 11-கலங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- -புல எண், உட்பிரிவு எண்.
- -பழைய புல எண், உட்பிரிவு எண்
- -ரயத்துவாரி(ர) அல்லது இனாம்(இ)
- -வகைப்பாடு(நன்செய்/புன்செய்)
- -இருபோக நன்செய் எனில் மொத்தத் தீர்வை வீதம்.
- -மண் வளமும், ரகமும்.
- -தரம்.
- -ஹெக்டேர் ஒன்றுக்கு தீர்வை வீதம்.
- -பரப்பளவு.
- -பட்டா எண் மற்றும் பதிவுபெற்ற நில உடைமையாளரின் பெயர்.
- -குறிப்பு
’அ’ பதிவேட்டைப் பராமரிப்பது
- இப்பதிவேடு இரண்டு பிரதிகளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றும், VAO விடம் ஒன்றும் பராமரிக்கப்படும்.
’அ’ பதிவேட்டினை மாற்றம் செய்யும்போது
- இப்பதிவேட்டில் நிலையாக மாற்றம் செய்யும் புல உட்பிரிவு மாறுதல்கள், நில எடுப்பு, நில ஒப்படைப்பு, நில மாற்றம் சம்பந்தப்பட்ட மாறுதல்கள் ஏற்படும் போது வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள பிரதியிலும் பதிய வேண்டும்.
- மேற்கண்ட மாறுதல்களை ‘அ’ பதிவேட்டில் பதியும் போது அம்மாறுதலுக்கு – உண்டான ஆணை எண் மற்றும் யாரால் வழங்கப்பட்டது அல்லது கீழ்நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் நிலைக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதற்கு சாட்சியாய் ‘அ’ பதிவேட்டில் – சுருக்கொப்பம் செய்ய வேண்டும்.
- எக்காரணத்தை கொண்டும் கிராம நிர்வாக அலுவலர் இப்பதிவேட்டில் மாற்றம் செய்யக்கூடாது.
- தற்போது விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடும், கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடும் என ஒரு கிராம்த்திற்கு இரண்டு ‘அ’ பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது.
நகரங்களில் ‘அ’ பதிவெடு பராமரிப்பு:
- நகர நிலை அளவைக் கணக்கெடுக்கப்பட்ட நகராட்சியில் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்பட்ட கிராமங்களின் பகுதி வார்டு வாரியாகவும், நில அளவை வாரியாகவும் நிலை பதிவேடு “அ“- வில் எழுதப்பட வேண்டும்.
- ’அ’ பதிவேட்டில் ஒவ்வொரு நகர நில அளவை எண், அதனுடைய உரிமை முறை, பரப்பளவு ஆகிய விவரங்கள் எழுதப்பட வேண்டும்.
- ’அ’ பதிவேட்டில் நகர்ப் பகுதியாக இருந்தால் நகர்ப் பகுதி என்றும், கிராமப் பகுதியாக இருந்தால் கிராமப் பகுதி என்று குறிப்பிட வேண்டும்.
- தமிழ்நாடு அரசினால் இராணுவப் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட இடமாக இருந்தால் – அத்தகைய நிலஅளவை எண் எதிரே குறிப்பு கலத்தில் “இராணுவ நிலம்” என்று குறிப்பிட வேண்டும் இதே போன்று ‘ இரவில்வேக்கு‘ சொந்தம் ஊராட்சிக்கு சொந்தம் என்பது குறிப்பிட வேண்டும். ஜமாபந்தியின் போது ‘அ’ பதிவேடு சோதனை
- ஜமாபந்தியின் போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ‘அ’ பதிவேட்டுடன் கிராமத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டினை ஒப்பிட்டுப் பார்த்து அதற்குண்டான சான்று வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
- இதனை ஜமாபந்தி அலுவலர் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
’A’ பதிவெட்டின் உள்ளடக்கம்
- இது ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள நிலத்திப் பரப்பயும், தீர்வை வீதத்தையும் காட்டுகிற ‘A’ பதிவெட்டின் தொகுப்பாகும்.
- அரசு நிலம்(வகைப்பாடு)
- அரசின் கட்டுபாட்டில் உள்ளவை
- அரசின் கட்டுபாட்டில் இல்லாதவை
- என தனித்தனியே காட்ட வேண்டும். இவற்றை ஆண்டுதோறும் ஜமாபந்தியின் போது காட்ட வேண்டும். நிலவரித் திட்டத்திற்குப் பின்னர் ஒவ்வொரு பசலியிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் ஆண்டுதோறும் குறிப்பிட வேண்டும்.
‘B’ பதிவேடு
- இது இனாம்களின் நிலப்புல பதிவேடு ஆகும்.
- பல்வேறு வகை இனாம்களின் கீழ் அதாவது சமய, அறக்கட்டளை, சொந்தப்பணி மற்றும் தசபந்தம் ஆகிய இனாம்களின் கீழ் உரிமை பட்டயம் முறைப்படுத்தப்பட்டு அவற்றுக் நேராக ஒவ்வோர் உரிமைப் பட்டயத்தின் கீழ் வரும் புலங்களையும் இதன் கீழ் காட்ட வேண்டும்.
- 1963- ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் மூலன்=ம் இவை நீக்கப்பட்டது.
- இவை 1963-க்கு பிறகு இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முடிந்துவிட்டன.
நிலப்பதிவேடு B1:
- இது நில உரிமை பட்டயத்திற்கான நிலப்பதிவேடு – ‘B’ பதிவேட்டிலிருந்து வேறுபட்டது ஆகும்.
- தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம் சட்டம் 1948 – இன் கீழ் முடிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு உரியதாகும்.
- இவை இரண்டு பாகங்களாக பராமரிக்கப்பட வேண்டும்.
பாகம் 1
- தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு – மற்றும் ரயத்துவாரியாக மாற்றம் சட்டம் – 1948(1948 – ஆம் வருட XXVI ஆவது சட்டம்)-இன் கீழ் பிரிவு 17(1) (பி) மற்றும் (2) இன் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட இனங்களைக் கொண்டதாகும்.
பாகம் 2
- இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் 1951(1951 ஆம் வருட XIX ஆவது சட்டம்)-இன் பிரிவு 34(2)-இன் கீழ் உரிமை அளிக்கப்பட்ட தேவதாசி இனாம்களைக் கொண்டதாகும்.
பாகம் 1:
- கீழ்க்கண்டவாறு ஐந்து பிரிவுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது:
- சமயக் கொடைகள்
- அறக் கொடைகள்
- கிராம பணிக்கொடைகள்
- தசபந்தம் கொடைகள்
- மேற்கண்ட 4-லிலும் அடங்காத ஏனைய கொடைகள்.
பாகம் 2:
- 1951 – தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டப் பிரிவு 34(2)-இன் கீழ் விவரிக்கப்பட்ட தேவதாசி இனாம்கள் சம்பந்தப்பட்டதாகும்.
- கிராமத்தில் பராமரிக்கப்படும் இப்பதிவேட்டை ஜமாபந்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டுடன் சரிபார்க்க வேண்டும்.
நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள்(Cowles) பதிவேடு:
- இப்பதிவேடு எட்டு பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்.
- பிரிவு – 1 : “Shedule Caste” – இனத்தவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிபந்தனைக்குட்பட்ட ஒப்படைகளைக் குறித்ததாகும்.
- பிரிவு – 2 : இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் அளிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஒப்படைகளைக் குறிப்பதாகும்.
- பிரிவு – 3 : நீர்ப்பாசனத் திட்டங்களால் பாதிக்கப்படும் நில ஒப்படைகளை பற்றியதாகும்.(இவை வருவாய்த் துறை ஆணை நிலை எண் 15-22(3) இன் கீழ் கூறப்பட்டுள்ளது)
- பிரிவு – 4 : சிறப்பு வீட்டுமனை விதிகளின் கீழ் உள்ள கொடையைக் குறிக்கும்.
- பிரிவு – 5 : நீண்டகால குத்தகை மற்றும் இதர நிபந்தனைகளுக்கு உட்பட்ட கொடைகளுக்கு உரியதாகும்.(வருவாய்த் துறை நிலை ஆணை எண். 19 பத்தி 1- இன் கீழ் கூறப்பட்டுள்ளது)
- பிரிவு – 6 : அரசியல் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஒப்படைக்குரியதாகும். (அரசு ஆணை எண், 3102 வருவாய்த் துறை, நாள் 23-12-1947 – இன் படி)
- பிரிவு – 7 : நீண்டகால நிலக்குத்தகை நிலங்களைக் குறிக்கும்.
- பிரிவு – 8 : SC –இனத்தவருக்கு நில எடுப்பு செய்து ஒப்படை செய்யப்பட்ட வீட்டுமனைகளுக்கு உரியதாகும்.
பட்டா:
கிராமக் கணக்கு எண் 3:
- புலங்களின் பதிவுகளின் மாறுதல்களை காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு ஆகும். இவை நான்கு பிரிவுகளைக் கொண்டவை.
- பிரிவு – 1 : உரிமையை விட்டுவிடுதல்(Relinquishment)
- பிரிவு – 2 : ஒப்படை(Assignment)
- பிரிவு – 3 : பட்டா மாறுதல்
- பிரிவு – 4 : இதர மாறுதல்கள்
- ஒவ்வொரு பிரிவு சம்பந்தப்பட்ட மாறுதல்களை அந்தந்தப் பிரிவின் படிவத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் எழுத வேண்டும்.
- மாறுதலுக்கான உத்தரவு விவரங்களைக் கலம் 8-இல் குறிப்பிட வேண்டும்.
- பிரிவு – 3 : பட்டா மாறுதல்கள் சம்பந்தமான விவரத்தைப் பொருத்தமட்டில் பதிவு பெற்ற கைப்பற்றுதாரரின் பட்டா எண், பெயர் முன்னும், பின்னும் தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும்.
- பிரிவு – 3 – இல் கீழ்க்கண்ட 5 உட்பிரிவுகள் அடங்கும்.
- வருவாய் பாக்கிக்காக விற்பனை செய்யப்பட்டவை
(A) அரசால் வாங்கப்பட்டவை
(B) தனி நபரால் வாங்கப்பட்டவை - நீதிமன்ற ஆணையின் பெயரில் விற்பனை அல்லது மாற்றம் செய்யபட்டது.
- தனியார் விற்பனை அல்லது கொடை ஆகியவற்றின் பேரில் மாற்றப்பட்டது.
- வாரிசு முறையினரால் மாற்றப்பட்டது.
- 12 – ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேல் தொடர்ந்தாற்போல் அனுபோகம் செய்ததினாலும் அது போன்ற காலத்திற்கு பட்டாதாரர் காணப்படாது போனாதினாலும் மாற்றப்பட்டவை.
- வாரிசு இன்றி அரசினை சேர்ந்த நிலங்கள்
- ஜமாபந்தியின் போதும், ‘அ’ பதிவேடு,அடங்கல்,10-இல் 1-சிட்டாவில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும்.
சிட்டா:
- பட்டாவாரியான நிலவரி திட்டத்தினை காண்பிக்கும் சிட்டாவாகும்.
- நிலவரித் திட்டம் முடிந்தவுடனேயே இக்கணக்கினை மேற்கொண்டு வருவாய்த்துறைக்கு பராமரிப்புக்காக இரண்டு பிரதிகள் வழங்கப்படுகிறது.
- முதல் பிரதி VAO – விடமும்
- 2 – ஆம் பிரதி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பராமரிக்கப்பட வேண்டும்.
- இப்பதிவேடு பட்டாவாரியாக எழுதப்பட வேண்டும்.
- ஒரு பட்டாவில் அடங்கிய கைப்பற்றுதாரர்கள் பெயர்கள், சர்வே எண், புன்செய், நன்செய், விஸ்தீரணம், தீர்வை ஆகியவற்றை தொகுத்து அந்தப் பட்டாவில் ஒரு கைப்பற்றில் உள்ள மொத்த புன்செய், நன்செய்ப் பரப்புகள் மற்றும் மொத்தத் தீர்வை ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.
- கிராம நிலங்களில் ஏற்படும் மாறுதல்களாவன நில ஒப்படை, நில எடுப்பு, நில எடுப்பு, பதிவு மாற்றம் ஆகிய விவரங்களை கிராமக் கணக்கு எண் 3-இல் குறிப்பிட்டுள்ளபடி, இதில் அவ்வப்போது மாற்றம் செய்ய வேண்டும்.
- இந்தத் மாற்றம் எந்த ஆணையின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதற்கு ஆணை எண் மற்றும் நாள் முதலிய விவரங்கள் குறிப்பிட வேண்டும்.
- இதனை சோதனை செய்ததின் அடையாளமாக வருவாய் ஆய்வாளர் அல்லது நில அளவர் கையொப்பம் பெற வேண்டும்.
- பொதுவாக பட்டா மாற்றங்கள் செய்யும் போது எந்த பட்டாவில் இருந்து வரவு வைக்கப்பட்டது மற்றும் எந்த பட்டாவில் தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
- இப்பதிவேட்டின் மாறுதல்களின் படி வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட வேண்டும்.
- இவை தற்போது கணினி மயமாக்கப்பட்டதால் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களை கணினியிலும் பதிவு செய்ய வேண்டும்.
- இந்த கணக்கு 5-ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக எழுதப்பட வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 1:
- இது கிராமத்தின் மாதவாரி-சாகுபடி கணக்கு ஆகும்.
- VAO பயிராய்வு செய்து ஒவ்வொரு மாதமும் எந்தெந்தப் புலங்களில் பயிர்கள் எந்த மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதன் விவரங்களை அடங்கலில் பதிய வேண்டும்.
கிராம கணக்கு எண் 1-A:
- இது சாகுபடி செய்யப்பட்ட வெவ்வேறு பயிரக்ளின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டியல் ஆகும்.
- நீர் பாய்ச்சப்பட்ட, நீர் பாய்ச்சப்படாத பரப்புகளின் விவரங்கள் தனித்தனியே கலம் 2 முதல் 10 வரை குறிக்க வேண்டும்.
- இந்தக் கணக்கை கணக்கு எண்1 உடன் பிரதி மாதம் 25-ஆம் தேதிக்குள் வருவாய் ஆய்வாளருக்கு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை அனுப்ப வேண்டும்.
கிராம கணக்கு எண் 2:
- இது கிராம அடங்கல் கணக்கு எனப்படும்.
- அடங்கல் என்பது கைப்பற்று நிலத்தையும், மற்ற அனைத்து வகையான நிலங்களையும் பிரிவுகளாக புலம் உட்பிரிவு வாரியாக அனைத்து விவரங்களும் காட்டும் ஓர் அதிமுக்கியமான கிராமக் கணக்கு ஆகும்.
- ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலத்திற்கு இக்கணக்கை பராமரிக்க வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 2-க்கு C உள்ளடக்கம்
- வருவாய்த் துறையின் பொறுப்பின் கீழ் உள்ள அரசு புறப்போக்கில் உள்ள மர விவரங்களை காட்டும் பதிவேடு ஆகும்.இது நான்கு பிரிவுகளாகப் பராமரிக்கப்படும்.
- அரசுத் தோட்டங்கள்
- குடிகளுடைய சொந்தத் தோப்புகள்(வருவாய் நில எண். 19-இன் கீழ் அறிவிக்கப்பட்ட நீண்ட கால நிலக் குத்தகைகள், குடிமக்களுடைய சொந்தத் தோப்புகளில்ன் கீழ் வரும்)
- அரசால் வரிவிதிக்கப்பட்டு அல்லது குத்தகைக்கு விடப்பட்டு, ஆனால் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனி மரங்கள்
- உள்ளாட்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆனால் உள்ளாட்சி மன்றங்கள் தங்கள் உரிமைகளை விட்டுவிட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள்.
கிராமக் கணக்கு எண் 2-க்கு D உள்ளடக்கம்:
- இது கிராமத்தின் நீர்பாய்ச்சப்பட்ட பரப்பின் விவரங்களை காண்பிக்கும் கணக்கு ஆகும்.
- இந்தக் கணக்கு ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும்.
பிரிவு – 1: நதிநீர் பாசன முறைகள் மற்றும் ஏரிகள்:
- நதிநீர்ப் பாசன முறை
- ஏரிகள்(நீா்தேக்க திட்டத்தால் நிரப்பப் பெற்றவை தவிர)
- இதர நீர்ப்பாசன ஆதாரங்கள்
பிரிவு – 2: கிணறுகள்
- இந்தக் கணக்கில் ஒவ்வோர் ஆதாரத்துக்கும் நீர் பாய்ச்சக்கூடிய பரப்பு, நடப்புப் பசலியில் நீர் பாய்ச்சப்பட்ட பரப்புப் பற்றி குறிப்பிடப்பட வேண்டும்.
- அரசுக்கு சொந்தமான கிணறுகள், தனி நபருக்கு சொந்தமான கிணறுகள் பற்றிய விவரங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
- இது ஒரு ‘புள்ளி விவரப் பதிவேடு’ ஆகும்.
- அரசு நீர்ப்பாசன ஆதாரங்கள் பழுதுபார்க்கப்பட்ட விவரங்கள், செலவழிக்கப்பட்ட தொகை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். கிராமக் கணக்கு 2E நீக்கப்பட்டது
கிராமக் கணக்கு 2F
- இது அடங்கலின் 18 – ஆவது கலம் குறிக்கப்பட்டுள்ள விவரங்களின் சுருக்கம் ஆகும்.
- அவை 1) வனம், 2) பயனற்ற பயிர் செய்ய இயலாத நிலம், 3) விவசாய மற்றும் பயன்படுத்தப்படும் நிலம், 4) பயிரிடத்தக்க தரிக, 5) நிலையான புல்தரை, 6) மரவகை பயிர், 7) நடப்புத் தரிஅ, 8) இதரத் தரிசு நிலங்களைக் காட்டும் பதிவேடு ஆகும்.
கிராமக் கணக்கு எண் 3
- புலங்களின் பதிவுகளின்(நிலத்தின்) மாறுதல்களை காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு. இது 4-பிரிவுகளைக் கொண்டது.
- உரிமையயை விட்டுவிடுதல்(Relinquishment)
- ஒப்படை(Assignment Land)
- பட்டா மாறுதல்
- இதர மாறுதல்களின் போன்றவற்றை குறிப்பதாகும்.
கிராமக் கணக்கு 3A:
- கணக்கு 3-இல் கைப்பற்று நிலங்களில் ஏற்பட்ட மாறுதல்களின் சுருக்கம் ஆகும்.
- கணக்கு எண் 3-இன் சுருக்கத்தின் அடிப்படையில் முன்பசலியில் கைப்பற்றில் இருந்தவைகளில் பிரிவு வாரியாக, கழிவுகளைக் கழித்து, பிரிவு வாரியாகச் சேர்த்தவை
கிராமக் கணக்கு எண் 4:
- இது அனைத்து அரசிறைக் கழிவு(Beriz Detuction)களைக் காண்பிக்கும்.
- இவை இரண்டு பிரிவுகளில் பராமரிக்கப்படும்.
- சமய நிலையங்களுக்காகக் கழிக்கப்படுவது.
- மற்ற காரியங்களுக்காகக் கழிக்கப்படுவது
கிராமக் கணக்கு எண் 5(வஜா கணக்கு)
- பருவநிலை பாதிப்பு அடையும் போது நிலவரி தள்ளுபடி செய்யபட்டு வருகிறது. இது மூன்று பிரிவுகளாகப் பராமரிக்கப்படுகின்றது.
- பிரிவு – 1: பருவநிலை பாதிப்பு ஏற்படும்போது பயிராய்வுச் செய்யப்படு விளைச்சல் அளவு 25 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் அத்தகைய நேர்வுகளில் வஜா செய்யப்படும் தீர்வை விவரங்கள் இதில் காட்டப்படுகிறது. இத்தள்ளுபடிகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.
- பிரிவு – 2: நிலையான நிரந்தர தள்ளுபடிகள் அனைத்தும் இதில் காட்டப்படுகிறது.
- பிரிவு – 3: அசாதாரண நிலையில் பாதிப்பு ஏற்படும் போது வருவாய்நிலை எண் 14-இன் படி நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
வஜாக்களின் விவரங்கள்:
- பிரிவு 5-I, பிரிவு 5-II, பிரிவு 5-III தீர்வை தள்ளுபடி விவர்ங்களைக் கூறுகின்றன.
- பிரிவு 5-I: ஒருபோக நன்செய்யில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீர்ப்பாசன ஆதாரத்தில் தண்ணீர் இல்லாமல், ஏரியில் நீர் வரத்து குறைவானதால் விளைச்சல் 25 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், தரத்தீர்வை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
- ஏரியில் நீர் போதாத நிலையில் நன்செய் நிலங்களில் புன்செய் பயிர் சாகுபடி செய்யப்பட்டால் நன்செய்க்கும் புன்செய்க்கும் உள்ள வித்தியாசத் தீர்வை தள்ளிக் கொடுக்க வேண்டும்.
- பிரிவு 5-II : நன்செய் நிலங்கள் நீர்ப்பாசன ஆதாரத்திலிருந்து தன்பாசன முறையாக எடுக்காத நிலையில் இறவை மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய இனங்களில் நிலையான வஜா ஒரு ஏக்கருக்கு ரூ. 1 வீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
- பிரிவு 5-III : அசாதாரண நிலை ஏற்படும் போது வருவாய் நிர்வாக ஆணையரின் பரிந்துரைபேரில் அரசு சிறப்பினமாகக் கருதி முழு நிலவரியையும் தள்ளுபடி செய்ய உத்தரவிடலாம்.
- இந்தக் கணக்குகளை VAO முறையாகப் பராமரித்து ஜமாபந்தியின் போது, வருவாய்க் கோட்ட அலுவலர் ஒப்புதலுடன் ஜமாபந்தி அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 6:
- இப்பதிவேட்டினை 6, 6-A என்று இரண்டு பிரிவுகளாக பராமரிக்க வேண்டும்.
- தண்ணீர் தீர்வை விதிப்பு பற்றி காட்டும் பதிவேடு ஆகும். பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி முறையில் விதிக்கப்படும் அபராதத் கணக்குகள் கணக்கு எண் 6-இல் பராமரிக்கப்படும்.
கிராமக் கணக்கு எண் 6-A உள்ளடக்கம்:
- ஒவ்வொரு பட்டாதாரராலும் நீர்ப்பாய்ச்சப்பட்ட தண்ணீருக்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை கூட்டி வரும் மொத்தத்தை கிராமக் கணக்கு 10-இல் – 2 – பிரிவுக்கு எடுத்துச் செல்லும் பதிவேடாகும். (போஸ்டிங் ரிஜிஸ்டர்).
கிராமக் கணக்கு எண் 7:
- னுமதி இன்றி புறம்போக்கு, தீர்வை விதிக்கப்பட்ட தரிசு மற்றும் தீர்வை விதிக்கப்படாத தரிசு ஆகிய நிலங்களின் அனுபோகம் செய்யப்படும் புலப்பரப்பையும், பல்வகை வருவாய்களையும் அதற்குண்டான மேல் வரிகளும் காட்டப்படும் பதிவேடு ஆகும். இது இரண்டு பிரிவுகளாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
- பிரிவு-1: புறம்போக்கு நிலம், தீர்வை ஏற்பட்ட தரிசு மற்றும் தீர்வை ஏற்படாத தரிசு நிலங்களின் ஆக்ரமாணம், விதிக்கப்படும் தீர்வை, தண்டத் தீர்வை, உள்ளுவர் மேல்வரிகள் ஆகியவற்றை இதில் கணக்கிட வேண்டும்.
- பிரிவு-2 : இதர இனங்கள் அதாவது புன்செய் நிலங்களுக்கு விதிக்கப்படும் தீர்வை, ஜாஸ்தி அபராதம், புறம்போக்கு நிலங்களுக்கு விதிக்கப்படும் தண்ணீர் தீர்வை மற்றும் அபராதமும், மேல்வரிகள் ஆகியவற்றை இதில் காண்பிக்க வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 8A, 8B:
- கிராமக் கணக்கு 8 – இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
- 8A : முதல் பிரிவு முதல் வகுப்பு நீர் நிலைகளைப் பற்றிய விவரங்கள் .
- 8B : இக்கணக்கில் மற்ற நீர் நிலைகள் பற்றிய விவரங்கள் அடங்கும்.
- இக்கணக்கு மூலம் நீர்பாசன ஆதாரத்தின் மூலம் அரசுக்கு வரும் வருவாய்களான தரத்தீர்வை, தண்ணீர் தீர்வை, தீர்வை ஜாஸ்தி, அபராதத் தீர்வை, கூடுதல் நன்செய் தீர்வை(Additional Assessment) மற்றும் கூடுதல் தண்ணீர் தீர்வை ஆகியவற்றை இந்தக் கணக்குக்கு கொண்டுவர வேண்டும்.
கணக்கு எண் 9A
- இந்தக் கணக்கு தமிழ்நாடு கூடுதல் தீர்வை மற்றும் கூடுதல் தண்ணீர் வரி சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் வருவாயினை காண்பிக்கும் பதிவேடு ஆகும்.
- இக்கணக்கைப் பாய்ச்சல் ஆதாரம் வாரியாக எழுத வேண்டும்.
கணக்கு எண் 10:
- இந்தக் கணக்கு இரு பிரிவுகளாகப் பராமரிக்கப்படுகிறது.
கணக்கு – 10 – இல் 1 பிரிவு:
- பட்டாவாரியான நிலவரி திட்டத்தினைக் காண்பிக்கும் சிட்டாவாகும்.
- நிலவரி திட்டம் முடிந்தவுடனேயே இக்கணக்கினை மேற்கொண்டு பராமரிப்புக்காக வருவாய்த் துறைக்கு இரண்டு பிரதிகள் வழங்கப்படுகிறது.
- முதல்பிரதி கிராம நிர்வாக அலுவலரிடமும் இரண்டாம் பிரதி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பராமரிக்கப்படுகின்றன.
- இப்பதிவேடு பட்டாவாரியாக எழுதப்பட வேண்டும்.
- இந்தக் கணக்கை 5-ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுத வேண்டும்.
கணக்கு எண்10-இல் 2-ஆம் பிரிவு:
- பட்டா வாரியாக கைப்பற்றில் உள்ள நிலங்களுக்கு விதிக்கப்பட வேண்டிய பல்வேறு வகை தீர்வை இனங்களின் விவரத்தைக் காட்டும் பதிவேடாகும்.
- இந்தப் பதிவேட்டில் பட்டா வாரியான விஸ்தீரணம், தீர்வை தள்ளுபடிகள், நிகரத் தீர்வை, பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி, புன்செய், நன்செய் தீர்வை, கழிவுகள், நிகரத் தீர்வை, உள்ளூர் மேல்வரிகள் ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 10A:
- இந்தக் கணக்கு கிராமக் கணக்கு 19-இல் (இறப்பு/பிறப்பு பதிவேடு) பதிவு செய்யப்பட்ட விவரங்களின்படி கைப்பற்றுதாரர் யாரேனும் இறந்துவிட்டால் அவர் பெயரை கைப்பற்றில் இருந்து நீக்கவும் அவருக்குண்டான வாரிசுதாரர்கள் பெயரில் பதிவு செய்யவும் கிராம நிர்வாக அலுவலரால் அனுப்பப்படும் பட்டியல் ஆகும்.
கிராமக் கணக்கு எண் 10C:
- இது இரண்டு பிரிவுகளாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
- பிரிவு-1 : வருவாய்ப் பதிவுகளை மாற்றக் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை வட்டாட்சியரால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்புவது குறித்தான பதிவேடாகும்.
- பிரிவு-2 : கிராம நிர்வாக அலுவலர் தன்னிச்சையாக இதே போன்ற இனங்களில் பெறப்படும் மனுக்களைக் காட்டும் பதிவேடாகும்.
கிராமக் கணக்கு எண் 11:
- ஒவ்வொரு பட்டாதாரருக்கும் அளிக்கப்பட்ட பட்டா படிவமாகும்.
- தற்போடு கிராமக் கணக்கு எண் 10-இல் 1-கணினி மயமாக்கப்பட்டதால் பட்டா மாறுதல் செய்யும் போது கணினி மூலம் பட்டா நகல் படிவம் கைப்பற்றுதாரருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கிராம கணக்கு எண் 12:
- கிராமம் முழுமைக்கும் உள்ள நில வருவாய் நிர்ணயச் சுருக்கமாகும்.
- இது கணக்கு எண் 2, 3A, 5, 6, 7, 9A, 10(1), 10(2) ஆகியவைகளில் உள்ள தொகுப்புகளை இதில் பதிய வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 13:
- இது கிராமங்களில் தினசரி வசூல்களைக் காண்பிக்கும் கணக்காகும்.
- பட்டாதாரர்கள் நிலவரி அரசுக் கடன்கள் மற்றும் இதர பாக்கிகளை செலுத்தியவுடன் பணம் செலுத்தியதற்காக அவர்களுக்கு பற்று சீட்டு வழங்க வேண்டும்.
- அந்த பற்றுச் சீட்டில் கண்டுள்ள விவரங்களின் படி தினசரியாகும் வசூல்களை இனம் வாரியாக தனித்தனி சிட்டாக்களில் வருவாய் கிராமம் வாரியாக பதிய வேண்டும்.
- தினந்தோறும் இந்தக் கணக்கை முடிக்க வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 14:
- ஒவ்வொரு நபரிடமிருந்து(பட்டாதாரர்) வசூலிக்கப்பட்ட தொகையைக் காண்பிக்கக் கூடிய 13-ஆம் எண் கணக்கின் சுருக்கமாகும்.
- இந்தக் கணக்கில் ஒவ்வொரு பட்டாதாரருக்கும் ஒவ்வொரு பக்கம் – ஒதுக்கி அதில் அவர் செலுத்த வேண்டிய முந்தைய பசலி வரையில் உள்ள கேட்பினை பதிவு செய்து அவர் செலுத்திய விவரத்தினை இதில் பதிய வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 14A உள்ளடக்கம்:
- 14A கணக்கு என்பது 14 – ஆம் நம்பர் படிவத்திலேயெ தயாரிக்கப்படும் சுருக்கமாகும்.
- பசலி முடிவில் கிராம ரொக்க கணக்குகளை பதிவு செய்திட வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 14B:
- வசூலிக்க இயலாதென கருதப்பட்ட பாக்கி விவரங்களை தெரிவிக்கும் விவரப்பட்டியல் ஆகும்.
கிராமக் கணக்கு எண் 14C:
- இந்தக் கணக்கு அதிக வசூல் விவரங்களை காண்பிக்கும் கணக்காகும். இது மூன்று பிரிவாகப் பராமரிக்கப்படுகிறது.
- பிரிவு – 1 : பசலியிலிருந்து அந்தந்த பட்டாதாரர்கள் கேட்புத் தொகைகளுக்கு மிகுதியாக செலுத்திய தொகை விவரம் ஆகும்.
- பிரிவு – 2 : வசூல் செய்யப்பட்ட தொகை மிகுதியாக இருந்தால் அதே பட்டாதாரருக்கு அடுத்த பசலியில் கேட்பு இல்லாத பட்சத்தில் அந்தத் தொகையை அவருக்கு திருப்பிக் கொடுக்கலாம். இவ்வாறான விவரங்கள் இதில் காட்டபடுகின்றன.
- பிரிவு – 3 : இந்தப் பிரிவில் ஒரு பட்டாதாரர் செலுத்திய தொகையில் 10 பைசாவுக்கும் கீழ் மிகுதியாக இருந்தால் அதனை அரசுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
கிராமக் கணக்கு எண் 15:
- கிராமத்தில் பட்டாதாரர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகைகள்(கிராமக் கணக்கு எண் 13-இன் படி) வங்கியில் செலுத்துவதற்குப் பராமரிக்கப்படும் சுருக்கமான பட்டியலாகும்.
- இவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யும் போது 13- ஆம் கணக்கு விவரப்படி சரிபார்த்து வங்கியில் செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
- நடைமுறையில் இருசால் நாமா – 15-க்கு பதில் செலான் நாமா தயாரிக்கப்பட்டு பணம் செலுத்தப்படுகிறது.
கிராமக் கணக்கு எண் 16:
- பசலி வாரியாக ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ஒவ்வொரு பட்டாதாரர் செலுத்த வேண்டிய கேட்பு வசூல் பாக்கியைக் காண்பிக்கும் கணக்காகும்.
- மாதந்தோறும் இந்தக் கணக்கை தயாரிக்க வேண்டும்.
- இதில் நிலவரி, உள்ளூர் மேல்வரி, உள்ளூர் மிகுமேல்வரி ஆகிய விவரங்களை பசலி வாரியாக தனித்தனியாகக் கணக்கிட வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 17:
- ஒரு பட்டாதாரர் செலுத்த வேண்டிய நிலவரித் தொகை தாமதமாக செலுத்தினால் இதற்கு வட்டியாக அபராதம் வசூலிக்கப்படுகிறது.
- இவை பதிவேட்டில் அதற்குண்டான கேட்பு, வசூல்பாக்கி ஆகிய விவரங்கள் காண்பிக்கப்படும்.
- நிலவரி பாக்கியானது அந்தந்த பசலி ஆண்டில் செலுத்த வேண்டும்.
- அவ்வாறு செலுத்தத் தவறிய காரணத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 100-க்கு 5ரூ வீதம் வட்டியாக அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
- இவை 4-பிரிவுகளாகப் பராமரிக்கப்படுகிறது.
(1)நிலவரி (2) மேல்வரி (3)உள்ளூர் மிகுமேல்வரி (4)தனி நிதிகள்.கிராமக் கணக்கு எண் 18:
- குடியானவர்கள் தாம் செலுத்த வேண்டிய நிலவரி மற்றும் இதர பாக்கிகளுக்கு அவர்களால் செலுத்தப்பட்ட தொகையைப் பெற்று கொண்டதற்கு VAO வழங்கும் பற்று சீட்டு ஆகும்.
கிராமக் கணக்கு எண் 19:
- VAO ஒவ்வொர் ஊராட்சிக்குட்பட்ட வருவாய் கிராமங்களில் நேரிடும் பிறப்பு, இறப்பு பதிவு செய்ய பதிவாளராக VAO நியமிக்கப்பட்டுள்ளார்.(Town Panchayat தவிர) இந்தக் கணக்கை புதிய வடிவத்தில் தயாரிக்க வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 20:
- இது மழைக் கணக்கு ஆகும்.ஏப்ரல் 1 முதல் மார்ச் வரை உள்ள நிதி ஆண்டு காலத்தில் பராமரிக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் 25-ஆம் தேதி முதல் இக்கணக்கின் முடிவை தெரிவிக்க வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 21:
- இது பட்டதாரர் அல்லது மற்றவர்களுக்கு சொந்தமான கால்நடைகள் குறித்தான கணக்கு.
- கால்நடைகளின் புள்ளி விபரங்களை 5-ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிட வேண்டும்.
கிராம கணக்கு எண் 22 நீக்கப்பட்டது
கிராமக் கணக்கு எண் 23:
- இது கிராமத்தில் ரயத்துவாரி உரிமை முறையில் உள்ள பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையை காண்பிப்பதாகும்.
- இந்தக் கணக்கை ஆண்டுதோறும் VAO பராமரிக்க வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 24:
- இது கிராமத்தில் உற்பத்திச் செய்யப்படும் கனிமங்களைப் பற்றி பதியும் ஆண்டுப் பதிவேடு ஆகும்.
- இந்தக் கணக்கை ஜனவரி முதல் டிசம்பர் வரை பராமரிக்க வேண்டும்.
- இது அந்தக் கிராமத்தில் உள்ள கனிமங்களின் விவரங்கள் மற்றும் அதன் மூலம் பெறப்படும் வருவாய் ஆகிய விவரங்கள் ஆகும்.
- மாவட்ட அள்வில் புவியியல் துறை மூலம் கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு கனிமங்கள் கணக்கிடப்படுகின்றன.
- கிராம நிர்வாக அலுவலர் 24 – கணக்குகள் தவிர பிற பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும்.
- நிலஅளவைப் பதிவேடு
- தடை ஆணைப் பதிவேடு
- மீன்வளப் பதிவேடு
- Bought in Land Register
- புள்ளி விவரப் பதிவேடு
- நன்செய்/புன்செய் கழிவு பதிவேடு
- வீட்டுமனைப் பட்டா பதிவேடு
- சமுதாய நிலங்கள் காட்டும் பதிவேடு
- கோயில் புறம்போக்கு பதிவேடு
- வேளாண்மை வருமான வரி பதிவேடு
- சுதந்திரப் போராட்ட வீரர் பதிவேடு
- அகதிகள் பதிவேடு
- ஊரக குடிநீர் பதிவேடு
- மரம் நடும் பதிவேடு
- பொதுக்கட்டடங்கள் குறித்த பதிவேடு
- புராதான சின்னங்கள் பதிவேடு
- அந்நியர்கள் வருகை குறித்தான பதிவேடு
- சமுதாய நலத்திட்டங்கள் குறித்தான பதிவேடு
- கடன் பதிவேடு
- வறியவர் வழக்கு பதிவேடு – போன்ற மற்ற பதிவேடுகளையும் கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்க வேண்டும்.
Comments
Post a Comment