தற்புகழ்ச்சி விரும்பாத தலைவர்
**************************************
காமராசரும், தாயார் சிவகாமி அம்மாளும் 1942 ஆகஸ்ட் மாதம் பம்பாய் மாநகரில் அகில இந்திய செயற்குழு கூடியது. காமராஜ், சத்திய மூர்த்தி, பக்தவச்சலம் முதலியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்தனர்.
**************************************
காமராசரும், தாயார் சிவகாமி அம்மாளும் 1942 ஆகஸ்ட் மாதம் பம்பாய் மாநகரில் அகில இந்திய செயற்குழு கூடியது. காமராஜ், சத்திய மூர்த்தி, பக்தவச்சலம் முதலியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்தனர்.
``வெள்ளையனே வெளியேறு'' போராட்டம் அந்தச் செயற்குழுவில்தான் அறிவிக்கப்பட்டது. மறுநாளே காந்தியடிகள், நேரு போன்ற தலைவர்களை வெள்ளைக்கார அரசு கைது செய்தது. மாநிலம் வாரியாக பிரபலங்களைக் கைது செய்யவும் முடிவு செய்தது. ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்ட காமராஜ் நேரடியாகச் சென்னை சென்றால் வழியிலேயே கைது செய்யப்படலாம் என எதிர் பார்த்தார்.
தான் கைதாகும் முன் செயற்குழு முடிவைத் தமிழகம் எங்கும் அறிவித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார். ஆந்திராவில் ரெயிலை விட்டு இறங்கி சில நாட்கள் தங்கினார். பின் சென்னைக்கு ரெயில் ஏறினார். அரக்கோணம் ஸ்டேஷனிலேயே இறங்கினார். ஸ்டேஷன் பிளாட்பாரம் முழுக்க போலீஸ். அவர்கள் காமராஜை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வேறு குறியாக இருந்ததால் காமராசரை கவனிக்கவில்லை.
காமராசர் அரக்கோணம் சோளங்கிபுரம் ராணிப்பேட்டை கண்ணமங்கலம், வேலூர், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்குப் போனார். ஒவ்வொரு ஊரிலும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக ராமநாதபுரம் சென்றார். பின் அங்கிருந்து மானாமதுரை வழியாக விருதுநகருக்குச் சென்று தனது தாயாரைச் சந்தித்தார்.
தலைவர், வீட்டுக்கு வந்திருக்கும் விஷயம் வெளியே தெரிந்து பிரமுகர்கள் அவரைத் தேடி வந்தனர். எனவே விருதுநகர் காவல் நிலையம் வரை விஷயம் பரவிற்று. அப்போது விருதுநகர் காவல் நிலையத்தில் எழுத்தச்சன் என்பவர் சப் இன்ஸ்பெக்டர். தன்னை எந்த நேரமும் கைது செய்து விடுவார்கள் என்பது காமராசருக்குப் புரிந்தது. தன்னைப் போலீஸ் கைது செய்யும்போது தொண்டர்கள் ஆவேசப்படலாம் என்றும் எதிர்பார்த்தார்.
உடனே விருதுநகர் காவல் நிலையத்துக்கு ``நான் வீட்டில்தான் இருக்கிறேன்! கைது செய்யலாம்'' என்று தகவல் அனுப்பினார். சப் இன்ஸ்பெக்டர் எழுத்தச்சன் தலைவர் வீட்டுக்கு வந்தார். ``ஐயா! கைது செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. நீங்கள் இப்போது அரியலூரில் தங்கி இருப்பதாக காவல் துறைக்கு ஒரு தகவல் வந்தது. அதன்பேரில் உங்களைக் கைது செய்ய எங்கள் படை அரியலூர் விரைந்துள்ளது.
உங்களைக் காணவில்லை என்று அவர்கள் திரும்பி வர சில நாட்கள் ஆகலாம். எனவே அதுவரை நீங்கள் விருது நகரில் இருக்கலாம். நாங்களும் கைது செய்ய மாட்டோம். எனவே இப்போது நான் உங்க ளைக் கைது செய்ய வரவில்லை'' என்றார் எழுத்தச்சன். ``வெளியே என் வேலைகள் முடிந்து விட்டன. இன்றே நான் உள்ளே (சிறைக்கு) வரத்தயார். தாமதிக்காமல் கைது செய்யுங்கள்'' என்றார் காமராசர். அப்படியானால் சரி என்ற எஸ்.ஐ. காமராசரைக் கைது செய்து அழைத்துப் போனார்.
அப்போது ஜெயிலுக்கு போனவர் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் வெளியே வந்தார். வெள்ளை அரசாங்கம் போட்ட வழக்கில் நீதிமன்றம் காமராசருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது.(வெளியே வந்த பின்னரும் காமராசர் தனது ஜெயில் வாழ்க்கையைப்பற்றி மேடைகளில் பேசியதில்லை பத்திரிகைகளில் எழுதியதில்லை. எழுத்தச்சன் பரிவுடன் நடந்து கொண்டதால் அவரின் பெயரும் காமராசரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது)
Comments
Post a Comment