எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ என்கிற ஆய்வு நூலின் வாயிலாகக் கண்ணைக் கூசும்படியான வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இருவரும் இணைந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிற காத்திரமான ஆவணமாக இந்த நூல் தமிழ்ச் சமூக ஆய்வுத் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தோள் சீலைக் கலகத்தை முன்வைத்து இந்த நூல் தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளபோதிலும், தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு வகுப்பின் சமூக அந்தஸ்து, படிநிலையில் தன...
ART - LITERATURE - CULTURE